இந்தியா போன்ற ஜனநாயக நாட்டை, ஒரு கட்சி தான் ஆள முடியும். அதிலிருந்து ஒருவர் தான் தேர்ந்தெடுக்கப் பட்டு, பிரதமர் ஆக முடியும்.

அப்படித்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் கூறுகிறது.

பின்னாலிருந்து வேண்டுமானால் சோனியா காந்தி போன்ற ‘நிழல் பிரதமர்’ கள் , மன் மோஹன் சிங் போன்ற உண்மைப் பிரதமர்களை ஆட்டி வைக்கலாம்.

நாட்டில் உள்ள அத்தனைத் துறைகளும், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள, அந்த ஒரு பிரதமருக்குக் கீழ்ப்பட்டே, அவர் விருப்பத்துக்குத் தக்கவாறே, இயங்க வேண்டும்.

அப்போது தான் ஜனநாயகம் என்னும் வண்டி, பல துறைகளான குதிரைகளால், ஒரே திசையில், வளர்ச்சி என்னும் சாலையில், முன்னோக்கி ஓட முடியும்.

கோர்ட், ரிசர்வ் வங்கி, விஜிலன்ஸ் கமிஷன், எலக்ஷன் கமிஷன், அரசின் தலைமைக் கணக்காயர் போன்று, பல குதிரைகள் நம் ஜனநாயக வண்டியை இழுக்கின்றன.

இவைகள் எல்லாம் தாங்களே சுதந்திரமாக இயங்கக் கூடியவை.

கோர்ட் என்னும் ஒரு குதிரையோ, ரிசர்வ் வங்கி என்னும் இன்னொரு குதிரையோ, அல்லது வேறு ஒரு குதிரையோ, வெவ்வேறு திசைகளில் ஓட ஆரம்பித்தால், பிரதமர் அல்லது ஆளும் கட்சி என்னும் வண்டியோட்டி தான் , அவற்றை அடக்கி, சரியான வழியில் ஓட்ட வேண்டும்.

வண்டியோட்டி எங்களை அடக்க முடியாது என்று அந்தக் குதிரைகள் சொல்லுமானால், அவற்றை அடங்க வைக்க வேண்டியது வண்டியோட்டியின் பொறுப்பு.

இல்லாவிட்டால், ஜனநாயக வண்டி குடை சாய்ந்து விடும் அபாயம் இருக்கிறது.

முன்பு, ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம்ராஜன் போனதற்கு பி சிதம்பரம் மிகவும் புலம்பினார். பின்னர் தான் தெரிந்தது, அவருக்கும், ரகுராம்ராஜனுக்கும் இருந்த கள்ள நட்பு.

இப்போது உர்ஜித் படேல், சொந்தக் காரணங்களால் ரிசர்வ் வங்கிக் கவர்னர் பதவியை ராஜினாமா செய்வதாக சொல்லி இருக்கிறார்.

மத்திய அரசுக்கும், இவருக்கும், ரிசர்வ் வங்கியில் உள்ள பணத்தை மாற்றும் விஷயத்தில் பிணக்கு என்றும் , அரசின் கொள்கைக்கு இவர் ஒத்துழைக்க வில்லை என்றும்,

அதன் காரணமாகவே, உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளார் என்றும் எதிர்க் கட்சிகள், ‘குய்யோ முறையோ’ என்று கத்துகின்றன. என்னவோ, ரிசர்வ் வங்கிக் கவர்னர்,

இப்போது தான் முதல் முறையாக, அரசு கொடுத்த நெருக்கடியில், பதவியை விட்டுப் போவதாக, அவை, புலம்புவதைப் பார்க்க சிரிப்புத் தான் வருகிறது.

‘பயனீர்’ பத்திரிகையின் பிரமோத் குமார் சிங் , முன்பிருந்த ரிசர்வ் வங்கி கவர்னர்கள் ராஜினாமா செய்துள்ளதைப் போட்டு உடைத்திருக்கிறார்.

1. என் சி சென் குப்தா என்பவர், 1975-ம் ஆண்டு, பதவிக்கு வந்த மூன்றே மாதத்தில், 19-8-1975 அன்று ராஜினாமா செய்துள்ளார். அப்போது பிரதமர் இந்திரா காந்தி. அவசர நிலை நாட்டில் இருந்தது. ஆட்சி செய்தது காங்கிரஸ். யாரும் கேள்வி கேட்க முடியாது.

2. 30-11-1977 ல் , நரசிம்மன் என்பவர், பதவி ஏற்ற 6 மாதத்திலேயே, ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அப்போது பிரதமர் மொரார்ஜி தேசாய்.

3. மன் மோஹன் சிங் , தன் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை விட்டு 14-1-1985 அன்று ஓடக் காரணமாக இருந்தவர் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி.

அவருக்குப் பின் வந்த ஏ கோஷ் என்பவரும் 1985, மார்ச்- ல், பதவி ஏற்ற 20 நாட்களிலேயே, ராஜினாமா செய்துள்ளார்.

4. 8-9-2008 அன்று, ரிசர்வ் வங்கிக் கவர்னர் ஒய் வி ரெட்டி, காங்கிரஸ் ஆட்சியில், ராஜினாமா செய்துள்ளார். அப்போதைய பிரதமர் மன் மோஹன் சிங்.

5. காங்கிரஸின் நரசிம்ம ராவ் பிரதமராக இருக்கும்போது, மன் மோகன் சிங் நிதி மந்திரியாக இருந்தார். அப்போது, ரிசர்வ் வங்கிக் கவர்னராக இருந்த எஸ் வெங்கடராமனைத் தூக்கி அடித்து விட்டு, சி ரங்கராஜனை பதவியில் வைத்தார்.

ஏதோ, இன்று தான் முதன் முறையாக ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை விட்டுப் போவதாக, ‘அரிச்சந்திர வேஷம்’ போடும் அரசியல் சத்புத்திரர்கள், மன் மோஹனிடம் சென்று, விளக்கங்களைப் பெறலாமே!

நாட்டைப் பிரதமர் மோடி தான் இப்போது ஆள்கிறார். அவர் தான் இந்திய ஜனநாயகத்தின் இப்போதைய வண்டிக்காரர்.

அவருக்குப் பிடித்தமானதை செய்து தர வேண்டியது, மற்றத் துறைகளின் தலைவர்கள் கடமை. ‘முடியாது’ என்று அழும்பு பிடித்தால் போய் விட வேண்டியது தான். ‘குள்ள நரி’ அரசியல்வாதிகள், பல்வேறு கீழ்த்தரக் காரணங்களுக்காக விமரிசனம் செய்வார்கள். அவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

Tags:

Leave a Reply