இந்தியாவின் 69-வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

 

இதன் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக ‘இந்தியா கேட்’ அருகே அமைக்கப்பட்டுள்ள அமர் ஜவான் ஜோதியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் விழா நடை பெறும் பகுதிக்கு வந்தார்.

 

அவரை தொடர்ந்து இந்தவிழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருந்த ஆசியான் நாட்டு தலைவர்கள் விழாமேடைக்கு வந்தனர். இவ்வாறு வருகை தந்த இந்தோனேஷியா, சிங்கப்பூர், வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, மியான்மர், பிலிப்பைன்ஸ், புரூனே, லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய 10 நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

 

பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குதிரைப்படை வீரர்கள் அணிவகுப்புடன் விழா மேடைக்குவந்தார். அங்கு அவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது 21 குண்டுகள் முழங்க தேசியகீதம் இசைக்கப்பட்டது.

 

இதைத்தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த விமானப்படை கமாண்டோ வீரர் ஜோதி பிரகாஷ் நிராலாவுக்கு அசோக சக்ரா விருது (மரணத்துக்கு பின்) வழங்கப்பட்டது. இந்தவிருதை ஜோதி பிரகாஷ் நிராலாவின் தாயார் மாலதி தேவி மற்றும் மனைவி சுஷ்மானந்த் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 

இந்த நிகழ்வுகளுக்கு பின் முப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு தொடங்கியது. இதை மேடையில் நின்றவாறே பார்வையிட்ட ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அவருக்கு அருகில் பிரதமர் மோடி மற்றும் சிறப்பு விருந்தினர்களும் அமர்ந்து கண்கவர் அணி வகுப்பை பார்த்துமகிழ்ந்தனர்.

 

முப்படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நடத்திய டெல்லி பிராந்திய தலைமை அலுவலக கட்டளைப்பிரிவு அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் அசிட் மிஸ்ட்ரி முதலாவதாக சென்றார். அவரை தொடர்ந்து துணைத்தலைவராக செயல்பட்ட டெல்லி பிராந்திய தலைமை அலுவலக ஊழியர்களின் தலைவரான மேஜர் ஜெனரல் ராஜ்பால் பூனியா சென்றார்.

 

இவர்களை தொடர்ந்து பரம்வீர் சக்ரா, அசோகசக்ரா விருது பெற்ற முன்னாள், இந்நாள் வீரர்கள் தனித் தனி வாகனங்களில் அணி வகுத்தனர். பின்னர் ஆசியான் அமைப்பு மற்றும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற 10 உறுப்பு நாடுகளின் கொடிகளை ஏந்திக்கொண்டு அணி வகுப்பு பரிவாரங்கள் சென்றன.

 

அதன் பின்னர் முப்படைகளின் பல்வேறு பிரிவினரும் கண்ணைக் கவரும் வகையில் ராஜபாதையில் அணிவகுத்து சென்றனர். இதில் ராணுவத்தின் 61-வது குதிரைப்படை பிரிவு, பஞ்சாப் படைப் பிரிவு, மராத்தா, டோக்ரா, லடாக் உள்ளிட்ட பிரிவுகள் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின.

 

முப்படையினரின் அணிவகுப்பை தொடர்ந்து பீரங்கிகள், ரேடார் தளவாடங்கள், ஏவுகணைகள் மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்கள் ராஜ பாதையில் அணிவகுத்ததுடன், இந்தியாவின் படை பலத்தையும் உலகுக்கு பறைசாற்றின. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை அணிவகுப்பில் சென்றபோது பார்வையாளர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க வெகுநேரமானது.

 

அடுத்ததாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 14 வாகனங்கள், 9 மத்திய அமைச்ச கங்களின் வாகனங்கள் என 23 ஊர்திகள் இடம்பெற்றன.

 

இவற்றில் தங்கள் மாநில கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அணி வகுத்த கர்நாடகா, மராட்டியம், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், காஷ்மீர், உத்தரகாண்ட், திரிபுரா மற்றும் லட்சத் தீவுகளை சேர்ந்த வாகனங்கள் சிறப்பு கவனம் பெற்றன. இதைப்போல வெளியுறவு அமைச்சகம் சார்பில் இடம்பெற்றிருந்த 2 ஊர்திகள், ஆசியான் நாடுகளின் கல்வி, கலாசாரம், நாகரிகம் போன்றவற்றை எடுத்துக்கூறும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தன.

 

விமானப்படை மற்றும் கடற்படையின் சிறப்புகளை விளக்கும் அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றன.

 

தொடர்ந்து ராணுவ வீரர்களின் வீரசாகசங்கள் ராஜ பாதையில் அரங்கேறின. இதில் முற்றிலும் எல்லை பாதுகாப்புபடையை சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்ட மோட்டார் சைக்கிள் சாகசம் முதல் முறையாக இடம்பெற்றது.

 

வீரதீர செயல்களுக்கான விருதுபெற்ற 18 குழந்தைகள் அணிவகுத்து சென்றது அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டது. அவர்களை தொடர்ந்து டெல்லி, நாக்பூர், திமாபூர் போன்ற பகுதிகளை சேர்ந்த பள்ளிகளில் இருந்து வந்திருந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பல்வேறு கருப்பொருட்களில் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டினர்.

 

இந்த அணிவகுப்பின் இறுதியாக விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வானில் அணிவகுப்பு மற்றும் சாகசங்களில் ஈடுபட்டன. இதில் ஹெர்குலிஸ், நேத்ரா, குளோப்மாஸ்டர், மிக் ரகவிமானங்கள், சுகோய், தேஜாஸ் விமானங்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை கவர்ந்தன.

 

இறுதியில் சுகோய்-30 ரக விமானம் ஒன்று மேடையில் இருந்த அனை வருக்கும் வணக்கம் தெரிவிக்கும் வகையில் செங்குத்தாக பறந்து இந்த அணிவகுப்பை நிறைவு செய்தது. பின்னர் தேசிய கீதத்துடன் குடியரசுதின சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்தன.

 

விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி துணைநிலை கவர்னர் அனில் பைஜால், மத்தியமந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், ஸ்மிரிதி இரானி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்களும் இந்த நிகழ்வுகளை பார்வையிட்டனர்.

 

குடியரசு தினவிழா கொண்டாட்டத்தையொட்டி டெல்லியில் வரலாறு காணாத வகையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்தியா கேட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 14 ஆயிரம் போலீசார் மற்றும் துணை ராணு வத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மேலும் பாதுகாப்பு காரணங் களுக்காக டெல்லியின் பலபகுதிகளில் மெட்ரோ ரெயில் சேவையும் பாதியாக குறைக்கப்பட்டு இருந்தது.

Tags:

Leave a Reply