இந்தியாவில் கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கான ஆயத்தங்களை மேற்பார்வைசெய்வதற்கும், கண்காணிப்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில் ஒரு உயர்மட்ட அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தகுழு நேற்று, முதல் முறையாக ஆய்வுபணிகளில் ஈடுபட்டனர். இந்தியாவில் 3 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ்பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், சிவில்விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே மற்றும் கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் மனுஷ்க் லால் மண்டாவியா ஆகியோர் இந்தகுழுவில் உள்ளனர்.

பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பிகே. மிஸ்ராவும் தனியாக, கொரோனா வைரஸ் தொடர்பான நிலைமை மற்றும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வுஹானில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட 600 க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு செய்யப் பட்டுள்ள மருத்துவ ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

கேரளாவில் உள்ள மூன்று இந்தியர்கள் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 2 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் தான், கேரளாவில் பதிவான மூன்று பாதிப்புகள் குறித்தும், உயர்மட்ட அமைச்சரவை குழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸை தடுப்பதற்கான எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பிறநடவடிக்கைகள் அப்போது ஆலோசிக்கப்பட்டன.

உலக சுகாதார நிறுவனம் (WHO) ஏற்கனவே கொரோனா வைரஸை உலகசுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இந்த வைரஸ் சீனாவில் இதுவரை 350 க்கும் மேற்பட்ட உயிர்களை கொன்றுள்ளது.

Comments are closed.