உலகிலேயே மிகவும் வெளிப்படையான மற்றும் முதலீட்டிற்கு தகுந்த நாடு இந்தியாதான், என பாரத பிரதமர் நரேந்திர மோடி, பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பேசி அங்கு வந்திருந்த வியாபார ஜாம்பவான்களை இந்தியாவில் முதலீடு செய்யசொல்லி இருக்கிறார்.

அதோடு ஒட்டுமொத்த உலக பொருளாதாரமே தேக்கத்தில் இருக்கின்ற போதிலும், பிரிக்ஸ் என்று அழைக்கப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள்தான் தற்போது உலக பொருளாதார மேம்பாட்டை முன்னெடுத்துச் சென்றுகொண்டு இருக்கின்றன.

மேலும் இந்திய நாட்டில், எண்ணிக்கையில் அடங்காத பல அரியவியாபார வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது. எனவே பிரிக்ஸ் குழுமநாடுகள் இந்தியாவில் முதலீடு செய்யவேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். குறிப்பாக இந்தியாவில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (உள்கட்டமைப்பு) மேம்பாட்டில் முதலீடுசெய்ய வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்.

தற்போது இந்தியாவில் நிலவும் நிலையான அரசியல்சூழல், எதிர்பார்க்க கூடிய வியாபாரகொள்கை முடிவுகள் மற்றும் வியாபாரிகளுக்கு சாதகமான சீர்திருத்தங்கள் போன்றவைகள் இருப்பதால், உலகிலேயே இந்தியாதான் முதலீடு செய்ய சிறந்த இடம் எனச் சொல்லி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரிக்ஸ் குழுமத்தின் ஐந்து நாடுகள் மட்டுமே ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்தின் ஐம்பது சதவிகிதத்தை பிரதிபலிக்கின்றன. தற்போது உலக அளவில் பொருளாதார சூழ்நிலைகள் சரியில்லாத போதிலும் உலகப் பொருளாதார மேம்பாட்டை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றன.

இதனால் லட்சக் கணக்கானவர்களை ஏழ்மையின் பிடியில் இருந்தும், பொருளாதார சிக்கல்களில் இருந்தும் வெளிக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றன. அதோடு ஏகப்பட்ட புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன எனச் சொல்லி இருக்கிறார் மோடி.

பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக பிரிக்ஸ் நாடுகளின் பதினோராவது உச்சி மாநாடு நடந்து முடிந்திருக்கிறது இந்த கூட்டத்தில் தான் நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலே சொன்னவைகளை எல்லாம் சொல்லி பல நாட்டு வியாபாரிகளையும் இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து இருக்கிறார்.

Comments are closed.