சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள சீனா, அதேசமயம் தொடர்ந்து 3-வது நாளாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவித்திருக்கிறது.

கடைசியில் கிடைத்த தகவலின்படி சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 981 ஆகவும், தொற்று எண்ணிக்கை 80 ஆயிரத்து 200 ஆகவும் உள்ளது.இந்தநிலையில், தென்கொரியாவில் இன்று மேலும் 142 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யபட்டு அதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 328 ஆகவும், மரணம் 32 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் டெல்லி மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த தலா ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, அனைத்து மாநில சுகாதாரத் துறை செயலாளர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா காணொலி காட்சிமூலம் ஆலோசனை நடத்தினார். அதில், அனைத்து மாநிலங்களின் விமான நிலையங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் தங்கள்மாவட்டத்தில் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி, மாவட்ட, தொகுதி மற்றும் கிராம மட்டங்களில் உள்ள குழுக்கள்மூலம் ஆய்வுசெய்ய வேண்டும் என்றும் ராஜீவ் கவுபா அறிவுறுத்தியுள்ளார்.இதேபோல, மாநிலங்களில் நோயாளிகளை தனிப்படுத்தி வைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று டெல்லி அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமாக இருப்பதாக சந்தேகத்தின் பேரில் , தயாராக இருக்க, டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. நல்ல தரமான தனிமைப்படுத்தும் வார்டுகளை உருவாக்குமாறு கோரியுள்ளோம்.

இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்

21 இத்தாலிய நாட்டினரில் 16 பேர் கொரோனா வைரஸ்பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் சாவ்லாவில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் தனிமைப் படுத்தப்பட்ட நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆக்ராவில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இனிமேல், நாங்கள் முன்னர் பட்டியலிட்ட 12 நாடுகளில் மட்டுமல்லாமல், இந்தியாவரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரான் அரசு எங்கள் முயற்சிகளை ஆதரித்தால், அங்கேயும் ஒருசோதனை ஆய்வகத்தை நிறுவவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு உள்ளது. இது ஒரு முழுமையான சோதனைக்கு பிறகு ஈரானில் இருந்து எங்கள் குடிமக்களை திரும்ப அழைத்துவர உதவும் என கூறினார்.

Comments are closed.