“இந்தியாவாவது, ஒருதேசமாக நீடிப்பதாவது? இன்னும் பத்தே வருடங்கள். உள்நாட்டுப் போர்களில் சிதறி சின்னாபின்னமாகப் போகிறது. அப்போது இந்த அடிமைகள் அவர்களைக் கட்டிவைத்து ஆண்ட நம்மைப் பற்றி நினைத்துக் கொள்வார்கள்” – 1947ல் இந்தியாவை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் எல்லா அதிகாரிகள் மனதிலும் இந்த எண்ணம்தான் இருந்தது. பலருக்கு அதுவே உள்ளக் கிடக்கையாகவும் இருந்தது.

அதைப் பொய்யாக்குவதற்கு ஒரு இரும்பு மனிதரை பாரதமாதா ஈன்றெடுத்திருந்தாள். சர்தார் வல்லபாய் படேல். 565 சமஸ்தானங்ளையும் ஒரு தேசமாக இணைக்க வேண்டிய மலைக்க வைக்கும் பணி. இந்தப் பணியில் சாம, தான, பேத, தண்டம் என்று இந்திய மரபுகூறும் நான்கு வழிகளையும் பயன்படுத்தினார் அவர். இந்தியா எனும் ஒருங்கிணைந்த நவீன தேசத்தின் சித்திரத்தை உலக வரைபடத்தில் அழுத்தமாக இடம் பெறச் செய்தார். ஹைதராபாத், ஜுனாகட் மாகாணங்களை அவர் இந்திய யூனியனுடன் இணைத்த விதம், உலகின் மாபெரும் அரசியல் ராஜதந்திர சாணக்கியர்களும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு இருந்தது. “சர்தார்” என்ற ஹிந்திதிரைப்படம் அந்த சரித்திரத்தை சமீப காலங்களில் நமக்கு நினைவூட்டியது.

சட்ட நுணுக்கங்களில் தேர்ந்த வெற்றிகரமான வழக்கறிஞராக தன் இளமைக் காலத்தைத் தொடங்கிய படேல், அதைத் துறந்து கேடா, பர்டோலி சத்தியாக்கிரகங்களின் ஊடாக விவசாயிகளின், வனவாசிகளின் தோளோடு தோள் நின்றுபோராடும் மக்கள் தலைவராக ஆனார். 1931க்குப் பின் காங்கிரஸ் கட்சியை அதன் மிகச் சிக்கலான வரலாற்றுத் தருணங்களில் வழி நடத்தினார். அழிக்கப்பட்ட சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் நிர்மாணிப்பதில் பெரும் பங்காற்றினார். அகமதாபாத் நகராட்சித் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர் என தான் வகித்த அத்தனை பதவிகளுக்கும் பெருமை சேர்த்தார். நேர்மைக்கும், மன உறுதிக்கும், நல்லாட்சிக்கும், நிர்வாக திறனுக்கும் இன்றளவும் நினைவு கூரப்படும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

அவரது நினைவை என்றென்றைக்குமாக நிலை நிறுத்தும் வகையில் 182 மீட்டர் உயரமுள்ள சர்தார் படேலின் இரும்புச் சிலையை இந்திய ஒற்றுமைச் சின்னமாக நிறுவ 2013ல் குஜராத் அரசு முடிவுசெய்து அடிக்கல் நாட்டி இப்போது அதை வெற்றிகரமாக நிறைவேற்றியும் விட்டது. குஜராத் மாநிலம் கேவடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிப் படுகையில் உள்ள ஒருதீவில், சர்தார் சரோவர் அணைக்கட்டுகளை நோக்கி கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது இச்சிலை. அமெரிக்காவின் சுதந்திர தேவிபோன்ற புகழ்பெற்ற சிலைகளை விஞ்சும் வகையில் உலகிலேயே மிகப்பெரிய சிலையாக இது இருக்கும்.

இந்த சிலை அமைப்புத் திட்டம், ஏதோ மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்து காண்டிராக்ட் கொடுத்து பணிகளை முடித்து திறப்புவிழா நடத்தும் சம்பிரதாயமான பொதுப்பணித்துறை சமாசாரமாக மட்டும் இருக்கவில்லை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இதை முன்வைத்து தேசிய ஒற்றுமை குறித்த மாபெரும் விழிப்புணர்வை இந்தியா முழுவதும் உருவாக்கவேண்டும் என்பதும் இதற்காகப் பொறுப்பேற்றுள்ள சர்தால் படேல் தேசிய ஒற்றுமை அறக்கட்டளையின் முக்கியநோக்கமாக இருந்தது.

"ஒவ்வொரு கிராமத்தின் மண்ணும், அந்த மண்ணின் விவசாயிகளின் பயன்பாட்டில் இருந்த இரும்புத் துகள்களும் சேகரிக்கப் படும். அந்த மண் ஒற்றுமைச் சிலையின் பீடமாகும். அந்த இரும்புத் துகள்கள் உருகி, இறுகிப்பிணைந்து இந்தியாவின் இரும்பு மனிதரின் சிலை உருக்கொண்டு எழும்" என்று 2013 டிசம்பர் 15 படேல் நினைவு நாள் அன்று அறிவித்தபடி அந்த தேசிய ஒற்றுமை இயக்கம் வெற்றிகரமாக செயல்பட்டு இந்தியாவின் பற்பல கிராமங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்ட இரும்புத்துகள்களைப் பீடமாகக் கொண்டு இச்சிலை அமைக்கப் பட்டுள்ளது.

2014ல் இந்த இயக்கத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் 'ஒற்றுமை ஓட்டம்' வெற்றிகரமாக நிகழ்ந்து, அதில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். பா.ஜ.க தொண்டர்கள் 1,87,000 ஊராட்சி ஒன்றியங்களைத் தொடர்புகொண்டு சிலைக்கான மண்ணையும் இரும்பு துகள்களையும் சேகரித்தனர். இதற்காக, ஒவ்வொரு ஊரையும் அடையாளப் படுத்தும் உபகரணங்களுடன் (tracking devices) கூடிய விசேஷ பெட்டிகள் வடிவமைக்கப் பட்டு, இந்த இயக்கத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கோரி பிரதமர் நரேந்திரமோதி எழுதிக் கையெழுத்திட்ட கடிதம் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கும் பாஜக தொண்டர்களால் வழங்கப் பட்டது. 3 லட்சத்திற்கும் மேலான பள்ளிகளும் தொடர்பு கொள்ளப் பட்டன. இந்த இயக்கத்தில் இணையும் அனைத்து கிராமங்களின் புகைப்படங்களையும் கோர்த்து ஒரு பிரம்மாண்டமான படத்தொகுப்பு (collage) உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்தினரும் கையெழுத்திட்ட பதாகைகள் 80 கிமீ நீளமுள்ள நீண்ட துணியில் இடம்பெற்று, இவை ஒற்றுமை சிலை வளாகத்தில் அமைந்திருக்கும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிக்கும் இந்த பிரம்மாண்ட சிலையை காணும்போது ஒருங்கிணைந்த இந்தியாவைக் குறித்த சிலிர்ப்பூட்டும் சிந்தனையும் உறுதியான நம்பிக்கையும் எழும் என்பது நிச்சயம்.

கட்சி சார்புகள் கடந்து, ஒவ்வொரு இந்தியரும் சர்தார் படேலின் நினைவைப் போற்றும், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த மகத்தான சிலையைப் போற்ற வேண்டும். இத்தகைய சிறப்பான நினைவுச்சின்னத்தை அமைத்த குஜராத் மாநில அரசையும் சர்தால் படேல் நினைவு அறக்கட்டளையையும் பாராட்ட வேண்டும்.

வந்தே மாதரம்

.நன்றி ஜடாயு 

Leave a Reply