இந்த சபையில், நேற்று முன்தினம் பேசிய, காங்கிரசின் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, காங்., சாதனைகளை பட்டியலிட்டார். காங்கிரசின் கொள்கைகளைத் தான், நாங்கள் துாசிதட்டி எடுத்து, வேறு பெயர் சூட்டி பயன்படுத்துவதாக கூறினார். அவர் ஒன்றை சொல்ல மறந்துவிட்டார்.நாட்டில் காங்கிரஸ் கொண்டு வந்த, அவசர நிலை எனப்படும், ‘எமர்ஜென்சி’யை அறிமுகப்படுத்தியதை, அவர் கூற தவறி விட்டார்.

இன்றிலிருந்து, 44 ஆண்டுகளுக்கு முன், ஆட்சியில் தான் நீடிக்க வேண்டும் என்பதற்காக, நாடுமுழுவதும், அவசர நிலையை பிரகடனம் செய்தார் ஒருவர்.பத்திரிகைகளின் வாய் பூட்டப்பட்டது; எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்; இந்த நாட்டின் ஆன்மா நசுக்கப்பட்டது. அத்தகைய செயலை செய்தவர்களை, இந்த நாடு ஒருபோதும் மன்னிக்காது. அவர்கள் செய்த பாவத்திற்கு விமோசனமே கிடையாது.

அந்த காலத்தில், நாட்டின் ஜனநாயக குரல்வளை நசுக்கப்பட்டதை யாராலும் மறக்க முடியுமா? அந்த நிலையை எதிர்த்து, போராடிய தலைவர்களை நான் வணங்குகிறேன்; இந்த நாடே வணங்குகிறது.முந்தைய ஆண்டுகளில், உச்சாணிக் கொம்பில் காங்கிரஸ் இருந்தது என்றார், நேற்று முன்தினம் பேசியவர். அதற்காக வாழ்த்துகள். அதேநேரத்தில், நீங்கள் தரையில் நடப்பது என்ன என்பதை பார்க்கத் தவறி விட்டீர்கள்.

நாங்கள் உங்களைப் போல உச்சியை அடைய விரும்பவில்லை. தரையில், மக்களுடன் மக்களாக இருக்க விரும்பினோம். அது, இந்ததேர்தலில் நடந்தது; எங்களுக்கு அமோக வெற்றி கிடைத்தது.

காங்கிரசின் சாதனைகளை நாங்கள் குறைத்து மதிப்பிடுகிறோம் என்றனர். அது எங்கள் வேலையில்லை; அந்த தவறை செய்யமாட்டோம். அதே நேரத்தில், இந்த நாட்டை உயர்த்திக் காண்பிப்போம். அதற்காக எங்கள் வாழ்வை அர்ப்பணிப்போம்.

இந்த நாட்டின் முன்னேற்றத்தை, சிலர் தான் மேற்கொண்டனர் என, சிலர் நினைக்கின்றனர். அவர்கள், சிலரின் பெயரை உச்சரிக்கின்றனர்; ஆனால், பலரை மறந்துவிட்டனர். மறக்கடிக்கப் பட்டவர்களை நாங்கள் நினைவுகூருகிறோம். அதையே நாங்கள் சற்று வித்தியாசமாக சிந்திக்கிறோம்; இந்த நாட்டின் முன்னேற்றத்திற் காக, ஒவ்வொருகுடிமகனும் பாடுபட்டுள்ளான்; அவர்களை நாங்கள் கவுரவிக்கிறோம்.

நாங்கள் சிறப்பான முறையில், ஐந்தாண்டு ஆட்சியைக் கொடுத்ததால் தான், 2019ல் மீண்டும், ஐந்தாண்டு ஆட்சி செய்ய, மக்கள் எங்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். முந்தைய எங்களின் ஐந்தாண்டு சாதனைதான், இந்த ஐந்தாண்டு ஆட்சிக்கான அத்தாட்சி.கடந்த, 2014 தேர்தலின் போது, நாங்கள் மக்களுக்கு புதிதாகத் தெரிந்தோம். காங்கிரசை கைகழுவ வேண்டும் என, நினைத்த மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்தினர்

மத்தியில் ஆட்சி அமைத்து 3 வாரங்களில், மத்திய அரசு மூன்று முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இந்த முடிவுகள், விவசாயிகள், வர்த்தகர்கள், இளைஞர்கள், சமூகத்தின் மற்ற பிரிவினருக்கு பெரிதும் பயன் பெறுவார்கள்.

நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. ஆனால், நாம் பழையமுறையை விட்டுவிட்டு, சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட புதிய முறைகளை கடைபிடிக்க வேண்டும். விவசாயிகளின் உற்பத்தி செலவை குறைக்க வேண்டும். விவசாயிகளின் கரங்களை நாம் வலுப்படுத்த வேண்டும். விவசாய துறையில் கார்பரேட்கள் ஏன் முதலீடுசெய்வது இல்லை? அவர்களை நாம் கவரவேண்டும். இதற்காக புதிய கொள்கைகளை உருவாக்கவேண்டும். விவசாயிகளுக்கு டிராக்டர்களை வழங்கினால் மட்டும்போதாது. உணவுபதப்படுத்துதல், கிடங்குகள், சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் கார்பரேட்கள் முதலீடு செய்யவேண்டும்.

மேக் இன் இந்தியா குறித்து கிண்டல் செய்யலாம். ஆனால், நாட்டில், மேக் இன் இந்தியா கூடாது என்பதை மறுக்கமுடியுமா? ஆயுதங்கள் தயாரிப்பில் 250 ஆண்டுகள் அனுபவம் நமக்கு உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, 18 ராணுவ தொழிற்சாலைகள் இருந்தன. அன்று, சீனாவில், எந்ததொழிற்சாலை இல்லை. அனுபவமும் இல்லை. ஆனால் இன்று சீனா, உலகளவில், அந்த நாடு ஆயுதங்கள், வெடிபொருட்களை ஏற்றுமதி செய்கிறது. நாம் மிகப்பெரிய இறக்குமதியாளராக உள்ளோம். இதனை நாம் மாற்ற வேண்டும்.

உலகின் மிகப் பெரிய 5 பொருளாதார நாடுகளில் இந்தியாவை ஒன்றாக நாம் மாற்ற வேண்டும். இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதில் கூட்டுமுயற்சி செய்வோம். நாட்டின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்த வேண்டும். உள்கட்டமைப்பில், ரூ.100 கோடி முதலீடு என்பது குறைவுதான். ஆனால், இதனை தாண்டி பெரிய கொள்கைகளை வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்பது நமது கொள்கை. இதற்காகதான் நீர்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசியது.

Tags:

Comments are closed.