பிலிப்பைன்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை நேற்று சந்தித்துப்பேசினார். அப்போது, பாதுகாப்பு, வர்த்தகஉறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

ஆசியான் அமைப்பின் 31-வது உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் மணிலாசென்றார்.

இந்த உச்சி மாநாட்டுக்கிடையே, பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் நேற்று தனியாக சந்தித்துப்பேசினர். அப்போது, தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க மீண்டும் ஒருவாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுவலுவடைந்து வருகிறது. இதன் மூலம், ஆசிய பிராந்தியத்தின் சிறந்த எதிர்காலம் மற்றும் உலகமக்களின் நலனுக்காக இரு நாடுகளும் இணைந்து பாடுபட முடியும்.

சமீப காலமாக ட்ரம்ப் பயணம்செய்யும் நாடுகளில் வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம் இந்தியாவைப் பற்றி பெருமையாக பேசிவருகிறார். அதேநேரம், அமெரிக்கா மற்றும் இதர உலகநாடுகளின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய முடிந்தவரை இந்தியா முயற்சிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசும் போது, “பிரதமர் நரேந்திர மோடியை வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ஏற்கெனவே சந்தித்துப்பேசி உள்ளேன். அவர் எனது சிறந்த நண்பராகி விட்டார். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல் படுவோம்” என்றார்.

ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புநிலவரம், இரு தரப்பு வர்த்தக உறவை பலப் படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடிய பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து இருதலைவர்களும் விரிவாக ஆலோசித்தனர்.

தென் சீனக்கடல் பகுதிக்கு சீனா சொந்தம் கொண்டாடி வருவதுடன், இந்திய பெருங்கடலிலும் ஆதிக்கம்செலுத்த முயற்சி செய்துவருகிறது. இதை தடுத்து நிறுத்துவதற்காக, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளும் இணைந்து ‘குவாட்’ என்ற புதிய அணி நேற்று முன் தினம் உதயமானது. இந்நிலையில் இந்தசந்திப்பு நிகழ்ந்துள்ளது.

கடந்த சனிக் கிழமை வியட்நாம் சென்றிருந்த ட்ரம்ப், டனாங் நகரில் நடந்த ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்றார். அப்போது, “இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சியில் இந்தியாவும் முக்கியபங்கு வகிக்கிறது” என்றார். அதாவது சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கவே ஆசியாபசிபிக் என்பதற்கு பதில் இந்தோபசிபிக் பிராந்தியம் என அவர் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பின்னர் லாஸ் பனோஸ் நகரில் உள்ள சர்வதேச நெல்ஆராய்ச்சி நிறுவனத்தை (ஐஆர்ஆர்ஐ) பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். அங்கு தனதுபெயர் சூட்டப்பட்ட (ஸ்ரீ நரேந்திர மோடி ரெசிலியன்ட் ரைஸ் பீல்டு லெபாரட்டரி) நெல் உற்பத்தி ஆய்வகத்தை தொடங்கிவைத்தார். இதையடுத்து, இந்திய தூதரகம் ஏற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியில் பிலிப்பைன்ஸில் வசிக்கும் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார்.

Leave a Reply