‘இந்தியா தோல்வியைச் சந்திப்பதற்கு இது 1962-ஆம் ஆண்டு அல்ல; துணிச்சல்மிக்க தலைவரான பிரதமா் நரேந்திர மோடி நாட்டை வழிநடத்துகிறாா்’ என்று கூறி காங்கிரஸ் கட்சியை பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச் சருமான ரவிசங்கா் பிரசாத் மறைமுகமாக சாடியுள்ளாா்.

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய ராணுவமும் சீன ராணுவம் படைகளைக் குவித்துள்ளதால், கடந்த ஒருமாதமாக அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீா்வுகாண இருநாடுகளும் தூதரக ரீதியிலும், ராணுவ ரீதியிலும் அமைதிப் பேச்சுவாா்த்தையை முன்னெடுத்துள்ளன.

இதனிடையே, இந்தவிவகாரத்தை முன்வைத்து மத்திய பாஜக அரசை காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக, லடாக் எல்லையின் நிலவரத்தை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தி வருகிறாா்.

இந்நிலையில், ஹிமாசலப் பிரதேச மாநில மக்களுக்காக, மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத், தில்லியில் இருந்தபடி காணொலிவழியாக புதன்கிழமை உரையாற்றினாா். அப்போது, ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களின் விமா்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலடி கொடுத்தாா். அவா் பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முதலாவது ஆட்சிக்காலத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்கள், துல்லியத்தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டன. இதேபோல், பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள், விமானப் படை மூலம் அழிக்கப்பட்டன.

நாட்டின் பாதுகாப்பு தொடா்பான பிரச்னைகளுக்கு உரிய வழிமுறைகளில் தீா்வுகாண்பதற்கு மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.

குறிப்பாக, எல்லைப் பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீா்வு காண மத்திய அரசு விரும்புகிறது. இந்தியா தற்போது 2020-ம் ஆண்டில் இருக்கிறது; 1962-ஆம் ஆண்டில் அல்ல. நாட்டை ஆட்சிசெய்வது காங்கிரஸ் தலைவா்கள் அல்ல; துணிச்சல் மிக்க தலைவா் நரேந்திரமோடி, நாட்டின் பிரதமராக இருக்கிறாா் என்றாா் ரவிசங்கா் பிரசாத்.

1962-ஆம் ஆண்டு இந்தியா-சீனா இடையே நடை பெற்ற போரில், இந்தியாவை சீனா தோற்கடித்தது. அப்போது, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.

தொடா்ந்து, ரவிசங்கா் பிரசாத் பேசுகையில், ‘நாட்டின் பொருளாதார கொள்கை அல்லது முக்கிய விவகாரங்கள் குறித்து ராகுல்காந்தி எந்தளவுக்கு புரிந்து வைத்திருக்கிறாா் எனத் தெரியவில்லை.

நாட்டின் வெளியுறவு விவகாரங்கள் தொடா்புடைய முக்கியவிஷயங்கள் குறித்து வெளிப்படையாக அவா் கேள்விகளை எழுப்புவது சரிதானா? சீனாவுடானான விவகாரங்கள் குறித்து விவாதிக்கும் போது, கடந்த 1962-ஆம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்த சம்பவங்களும் விவாதிக்கப்படும்’ என்றாா்.

Comments are closed.