பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியின்கீழ், இந்திய பொருளாதாரம் உலகிலேயே மிகவும்வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரமாக உருவெடுத்திருப்பதாக பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.


மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இது தொடர்பாக அவர் பேசியதாவது:மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்த போது, நாட்டின் பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. அப்போது நாட்டின் பொருளாதார அமைப்பு முடங்கிக்கிடந்தது. அதேநேரத்தில், மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உலகிலேயே வேகமாக வளர்ச்சி யடைந்து வரும் பொருளாதார சக்தியாக, இந்தியா தற்போது திகழ்கிறது.


நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 65 சதவீதம் பேர், இளைஞர்கள்தான். அந்த இளைஞர் சக்திக்கு ஓர் அமைப்பை ஏற்படுத்திதர வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அப்போதுதான் அவர்களால் திறம்படசெயல்பட்டு, நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யமுடியும்.


திறன் மேம்பாட்டுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. இதை கருத்தில் கொண்டுதான், திறன்மிகு இந்தியா எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப் படுத்தியது. இளைஞர்களின் திறன்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், ஸ்டார்ட் அப் இந்தியா (தொடங்கிடு இந்தியா) மற்றும் ஸ்டாண்ட் அப் இந்தியா (எழுந்திரு இந்தியா) திட்டங்களை மத்திய அரசு தொடங்கிவைத்துள்ளது. இந்தத்திட்டங்கள் மூலம், நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் தங்களது பங்களிப்பை அளிக்க முடியும். மேற்கண்ட திட்டங்களில் இளைஞர்கள் கவனம் செலுத்தினால், யாரிடமும் அவர்கள் இனி வேலைகேட்டு செல்ல வேண்டியதில்லை. அவர்களே வேலைவாய்ப்புகளை அளிக்கும் நிலைக்கு உயருவார்கள்.


மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியிலிருக்கும் சிவராஜ்சிங் சௌஹான் தலைமையிலான அரசானது, சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் நன்மைதரும் திட்டங்களை தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. சமூகத்தில் அடித்தட்டு மக்களை அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடைவதையும் சிவராஜ்சிங் சௌஹான் அரசு உறுதி செய்து வருகிறது. அவரது அரசின் நடவடிக்கைகளால்தான், இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களின் பட்டியலில் இருந்து வெளியே வந்து, வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாக மத்தியப்பிரதேச மாநிலம் திகழ்கிறது என்றார் அமித் ஷா.


நிகழ்ச்சியில் மத்தியப்பிரதேச முதல்வரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவராஜ்சிங் சௌஹான் பேசியபோது, பிரபல தொழிலதிபர்கள் டாடா, பிர்லா, அம்பானிகள் போன்று தங்களது மாநிலத்தில் புதிய தொழிலதிபர்களை உருவாக்க விரும்பு வதாகவும், இந்த நோக்கத்துக்காக இளைஞர்களுக்கு கடனுதவி அளிக்கும் வங்கிகளுக்கு மாநில அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "உலகுக்கு தலைவராக இந்தியா திகழவேண்டும் என்று நமது பிரதமர் விரும்புகிறார்; இதை சாத்தியமாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எனது தலைமையிலான மத்தியப்பிரதேச அரசு மேற்கொள்ளும்' என்றார்.

Tags:

Leave a Reply