அதிமுகவின் பெயர், இரட்டை இலை  சின்னம், கொடி மற்றும் அதிகாரப் பூர்வ கடிதம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடுசெய்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதிமுகவில் நிகழ்ந்த இபிஎஸ் – ஒபிஎஸ் அணிகள் சேர்க்கைக்குப் பிறகு அக்கட்சியின் அவசரப் பொதுக்குழுகூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரது நியமனங்கள் செல்லாது என்றும்,அவர்கள் இரு வரையும் கட்சியிலிருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் ஜெயக் குமார், சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி தில்லி சென்றனர். அங்கு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கட்சியின் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

அத்துடன் முடக்கப்பட்ட கட்சியின்பெயர் மற்றும் சின்னம் இரண்டும் ஒருங்கிணைந்த அணியான தங்களுக்கே ஒதுக்கப்படவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதேநேரம் டிடிவி தினகரன் தரப்பும் இந்தவிவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல்செய்ய தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திடம் மனுசெய்திருந்தது

அன்றே அமைச்சர்கள் தலைமையிலான அணி சென்னை திரும்பியபின்னர் தேர்தல் ஆணையம் சார்பில் அதிமுக.,வின் இரட்டை இலை சின்னம்தொடர்பான விசாரணை அக்டோபர் 6-ல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.

அன்று துவங்கி ஐந்து கட்டங்களாக தேர்தல் ஆணையம் இருதரப்பினரிடையே தொடர்ந்து விசாரணை நடத்தியது. இருஅணிகளின் தரப்பில் தனித்தனியாக எழுத்துப்பூர்வ வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதேசமயம் இந்தியாவின் முக்கியமான வழக்கறிஞர்கள் இருதரப்பிலும் ஆஜராகி வாதாடினார்கள்..

விசாரணையின் முடிவில் அதிமுகவின் பெயர், இரட்டை இலைசின்னம், கொடி மற்றும் அதிகாரப்பூர்வ கடிதம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்புவெளியிட்டுள்ளது. 

செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, இரட்டை இலைசின்னம் எங்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி, தேர்தல்கமிஷன் இந்த தீர்ப்பை வழங்கிஉள்ளது. எங்கள்பக்கம் நியாயம் இருப்பதால் தேர்தல்கமிஷன் நியாயமான தீர்ப்பை வழங்கி உள்ளது. இது மகிழ்ச்சியானசெய்தி. 90 சதவீதம் நிர்வாகிகள் எங்கள்பக்கம் உள்ளனர். என்றார்.

துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பேசுகையில்; தொண்டர்களின் எண்ணம்போல் இயக்கமும், ஆட்சியும் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் சோதனை ஏற்பட்டு தேர்தல்கமிஷன் நம்பக்கம் இருக்கிறது என்று காட்டப்பட்டுள்ளது. எம்ஜிஆர்., ஜெயலலிதாவுக்கு இந்தவெற்றியை அர்ப்பணிக்கிறோம். அனைவரும் ஒருங்கிணைந்து ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்தி செல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

அதிமுக தரப்பில் தேர்தல்கமிஷன் முன்பு ஆஜரான வக்கீல் பாபுமுருகவேல் கூறியதாவது:

தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தினகரன் தரப்பு ஆவணங்களில் முரண்பாடு இருந்தது. பொதுக்குழு கூட்டியதன் ஆதாரங்களை தேர்தல்கமிஷனிடம் தாக்கல் செய்தோம். ஐக்கிய ஜனதா தளம் தொடர்பான தீர்ப்பும் எங்களுக்கு எதிர் காலத்திலும் உதவும்.

* நியாயத்திற்கும், தர்மத்திற்கும் கிடைத்தவெற்றி – அமைச்சர் தங்கமணி.
* இது அதிமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியான நாள், – அமைச்சர் காமராஜ்.

இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிகளுக்கு ஒதுக்கியது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

1. மக்களவையில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியினருக்கு 34 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கிறது. அதேவேளையில் டிடிவி தரப்புக்கு 3 எம்.பி.,க்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது.

2. மாநிலங்களவையில்  ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியினருக்கு 8 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கிறது.  டிடிவி தரப்புக்கு 3 எம்.பி.,க்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது.

3. தமிழக சட்டப்பேரவையில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியினருக்கு 111  எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருக்கிறது. டிடிவி தினகரன் தரப்புக்கு 20 எம்.எல்.ஏ.,க்கள் (தகுதி நீக்கம் செய்யப்பட்ட சிக்கலில் இருக்கும் 18 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட)ஆதரவே இருக்கிறது.

4. புதுச்சேரி அதிமுகவில் 4 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவும் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியினருக்கே இருக்கிறது.

5. எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் ஆதரவு மதுசூதனன் தலைமையிலான ஓ.பன்னீர்செல்வம், செம்மலை உள்ளிட்ட மனுதாரர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அணியினருக்கே அதிகமாக இருப்பதால் சின்னம் அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

6. இரட்டை இலை சின்னத்தை மதுசூதனன் தலைமையிலான அணியினர் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயரைப் பயன்படுத்தவும் எந்தத் தடையும் இல்லை.

7. அதேபோல் கட்சிக் கொடியையும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தையும் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியே இனி பயன்படுத்த முடியும்.

8. இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக கடந்த மார்ச் 22-ம் தேதி தேர்தல் ஆணையம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது.

9. சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தள சிக்கல் பாணியிலே இரட்டை இலை பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை யாருக்கு இருந்ததோ அவர்களுக்கே சின்னம் ஒதுக்கப்பட்டது.

10. அதிமுகவுக்கு கோடிக்கணக்கான தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது. அதில் எந்த அணிக்கு ஆதரவு என்பதை தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் ஆதரவின் அடிப்படையிலேயே உறுதி செய்ய முடியும். எனவே, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு கொண்ட அணிக்கே இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுகிறது. எனவே, சின்னம் ஒதுக்கீடு செய்ய பொது வாக்கெடுப்பு தேவையில்லை.

 

 

 

Leave a Reply