இலங்கை தலைநகர் கொழும்புவில் 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலகையே உலுக்கியுள்ள இந்ததாக்குதலை அடுத்து அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர்பண்டிகை கொண்டாட்டத்தை நள்ளிரவில் தொடங்கி கொண்டாடிக் கொண்டிருந்தனர். இலங்கையின் தலை நகர் கொழும்புவிலும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்திற்காக தேவாலயங்களில் திரண்டிருந்தபொழுது, அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துச் சிதறின.

 

கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், நெகோம்போ பகுதியில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு பகுதியில் உள்ள இவாஞ்சலின் தேவலாலயம் ஆகிய 3 தேவாலயங்களிலும், கொழும்புவில் உள்ள ஷங்ரி லா, சின்ன மோன் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய 3 நட்சத்திர விடுதிகள் ஆகிய 6 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் வெளிநாட்டினர் 35 பேர் உட்பட 215 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதனையடுத்து பிற்பகலில் கொழும்புவில் மேலும் 2 இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்நிலையில் 8வது தாக்குதல் மட்டும் மனித வெடிகுண்டு தாக்குதல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து தொடர்ந்து கவனித்து வருவதாக தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, பாதிக்கப்பட்ட இந்தியர்கள் தொடர்பு கொள்வதற்காக இலவச தொலைப்பேசி எண்களை அறிவித்துள்ளது.

தாக்குதல்குறித்து பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து இலங்கையில் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

மேலும் காலவரையற்ற ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இதுவரை எந்தஅமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்தத் தாக்குதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply