இளைஞர்கள் மத்தியில் மதுகுடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும் அதைத்தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உமியா சன்ஸ்தான் சார்பில் ‘மா உமியா தம்’ என்ற ஆசிரமத்தை காணொலி காட்சிமூலம் பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

நமது முன்னோர்களில் பெரும்பாலானோர் மதுகுடிப்பதை விரும்பவில்லை. ஆனால் சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் மதுகுடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதை இப்போது கட்டுப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டால் அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளில் நமது சமூகம் சீரழிந்துவிடும்.

பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் உமியா சன்ஸ்தான் அமைப்பு மிக முக்கியபங்கு வகித்து வருகிறது. குறிப்பாக, பெண் சிசுக் கொலையை தடுத்து நிறுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியது. மேலும் நான் குஜராத் முதல்வராக பொறுப்பேற்றபோது நிகழ்ந்த நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை உமியா அமைப்பு செய்தது.

அந்த வகையில் இளைய சமுதாயத்தினரை மதுப் பழக்கத்திலிருந்து விடுவிக்கவும் உமியா அமைப்பு உதவ முன்வர வேண்டும். மேலும் இந்த ஆசிரமத்துக்குவரும் பக்தர்களிடம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். – பிடிஐ

Leave a Reply