இஸ்ரோ தனது அடுத்தகட்ட சாதனையாக மனித விண்வெளிப் பயணத்தைத் தனது சொந்தமுயற்சியில் விரைவில் நிகழ்த்தும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே முற்றிலும் தயாரான கனரக ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி மார்க் 3 நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது. இந்தச் சரித்திர வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த சாதனைக்கு தயாராகிவருவதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தனது அடுத்தசாதனை முயற்சியாக மனித விண்வெளிப் பயணத்துக்கு ஏற்பாடு செய்துவருகிறது.

உள்நாட்டிலேயே தயார்படுத்தும் வகையில் க்ரியோ ஜெனிக் தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக புதிய செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் உள்நாட்டிலிருந்தே எவ்வித அயல்நாட்டு உதவியும் இல்லாமல் மனிதனை விண்வெளிக்கு அனுப்பி சோதிக்கவுள்ளது இஸ்ரோ. இதுகுறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன்நாயர் கூறுகையில், ‘சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் அளிக்காத வகையில் செயற்கைக்கோள் தயாரிக்க பயன்படும் தொழில் நுட்பமே க்ரியோஜெனிக் தொழில்நுட்பம். இதன் மூலமே மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் செயற்கைக் கோளை இஸ்ரோ தயாரித்து வருகிறது. மொத்தத்தில் மீளக்கூடிய, மறுபயன் பாட்டுக்கு வழிவகுக்கக்கூடிய அளவில் செயற்கைக் கோள்களை உருவாக்குவதே இஸ்ரோவின் தற்போதைய தலையாய நோக்கமாகும்’ என்றார்.

Leave a Reply