இஸ்ரோ முன்னாள் தலைவர் ராமச்சந்திரராவ் வயதுமுதிர்வு காரணமாக இன்று பெங்களூரில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இஸ்ரோவின் செய்திதொடர்பாளர் தேவிபிரசாத் கர்னிக் கூறுகையில், இன்று அதிகாலை 3மணியளவில் ராமச்சந்திர ராவ் மரணம் அடைந்தார் என தெரிவித்துள்ளார். ராவிற்கு மனைவியும், ஒருமகனும் மகளும் உள்ளனர்.

சென்னை பல்கலைக் கழகத்தில் அறிவியலில் இளங்கலைப்பட்டமும், பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார் ராமச்சந்திரராவ். அகமதாபாத் இயற்பியல் ஆய்வுக்கூடத்தில் 1961-ல் முனைவர் பட்டம்பெற்றார். டாக்டர் விக்ரம் சாராபாயின் வழிகாட்டுதலில், காஸ்மிக்கதிர்கள் குறித்து ஆராய்ந்தார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் உயர் ஆராய்ச்சிமையத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றினார்.

காஸ்மிக் கதிர்களில் உள்ள எக்ஸ்கதிர்கள், காமா கதிர்கள் குறித்து ஆராய்ந்தார். செயற்கைக் கோள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பொறுப்பை 1972-ல் ஏற்றார். இவரது வழிகாட்டுதலில், 1975-ல் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா மற்றும் அடுத்தடுத்து பல செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ நிறுவனத்தின் செயற்கைக்கோள் மைய இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1984 முதல் 1994 வரை இஸ்ரோ தலைவராகசெயல்பட்டார். கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ் விருது, சாந்திஸ்வரூப் பட்னாகர் விருது, மேகநாத் சாகா பதக்கம், ஜாகிர் உசேன் நினைவு விருது, ஆர்யபட்டா விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர். 1976ஆம் ஆண்டு பத்மபூஷண் விருதுபெற்றார். இந்த ஆண்டு அவருக்கு மத்திய அரசு பத்மவிபூஷன் விருதை வழங்கியது. இந்நிலையில் உடுப்பி ராமச்சந்திர ராவ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

விஞ்ஞானி ராமச்சந்திரராவ் மறைவிற்கு பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். விஞ்ஞானி ராவ்மறைவு அதிர்ச்சியளிக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் அவரதுபணி மறக்கமுடியாது என்று கூறியுள்ளார்.

Leave a Reply