வளைகுடா பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும் நோக்கில், ஈரான்விவகாரத்தில் ஒன்றிணைந்து செயல்பட பிரதமர் நரேந்திரமோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஒப்புக்கொண்டனர்.

ஜி20 நாடுகளின் இரண்டு நாள் உச்சி மாநாடு, ஜப்பானின் ஒசாகா நகரில் வெள்ளிக் கிழமை தொடங்கியது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த உச்சிமாநாட்டினிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றபின் நரேந்திர மோடி அதிபர் டிரம்ப்பைச் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இந்தச் சந்திப்பின் போது, இந்தியாவுக்கு அண்மையில் வருகைதந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோவிடம் கொடுத்தனுப்பிய கடிதம் மூலம் இந்தியா மீதான அன்பை வெளிப்படுத்தியதற்காக அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றிதெரிவித்தார்.

இந்தியா உறுதி: இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக, பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்க அதிபருடன் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதித்தேன். தொழில் நுட்ப மேம்பாடு, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கிடையே நிலவி வரும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இருவரும் விவாதித்தோம். அமெரிக்காவுடனான பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா உறுதி கொண்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆக்கப்பூர்வமானது: இந்தச்சந்திப்பு குறித்து, வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பு மிகவும் ஆக்கப் பூர்வமாக இருந்தது. பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எந்தவித ஒளிவு மறைவுமின்றி இருவரும் விவாதித்தனர்.  இந்தியாவின் எரிசக்தித் தேவை குறித்தும், ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரம் குறித்தும் அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். வளைகுடா பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலை நாட்டவும், ஈரான் விவகாரத்தில் ஒன்றிணைந்து செயல்படவும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.

ஈரானுடன் இந்தியா நல்லுறவு கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கான எரிசக்தித் தேவையையும் ஈரான் பூர்த்தி செய்து வந்திருக்கிறது. இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 11 சதவீதத்தை அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்துவந்தோம். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு பிறகு, ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிசெய்வது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், இந்தியாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக ஈரான் முக்கியப் பங்குவகிப்பதால், அங்கு அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவவேண்டியது அவசியம் என்று அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதிபர் டிரம்ப் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து அவசரமாக ஆலோசனை செய்யவேண்டிய அவசியமில்லை என்றார். 5ஜி தொழில்நுட்பத் துறையில் நிலவும் பல்வேறு வாய்ப்புகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.  இந்தச்சந்திப்பின்போது, ரஷியாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைகளை இந்தியா வாங்குவது தொடர்பாக எதுவும் விவாதிக்கப்படவில்லை என்றார் விஜய் கோகலே.

 ஈரான் விவகாரம் குறித்து டிரம்ப்பிடம் பேசியபோது, வளைகுடா பகுதிவழியாக செல்லும் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படைகப்பல்கள் மூலம் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்துள்ளோம் என்று மோடி தெரிவித்தார். டிரம்ப் இதனை வரவேற்றார்.

சர்வதேச டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதில், ஒருங்கிணைப்பு, புத்தாக்கம், முதலீடு, உள்கட்டமைப்பு, தற்சார்பு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை கடைப்பிடிக்கவேண்டும். இது தொடர்பாக சர்வதேச அளவில் கருத்தொற்றுமை ஏற்படவேண்டும். இதன் மூலம் அனைத்து நாடுகளும் சீரான வளர்ச்சியைப் பெற முடியும் என்று மோடி தெரிவித்தார்.

இந்திய, அமெரிக்க வர்த்தக அமைச்சர்கள் விரைவில் சந்தித்துப்பேசுவது என்று பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் இடையிலான பேச்சுவார்த்தையின் போது ஒப்புக் கொள்ளப்பட்டது.
அண்மையில், வர்த்தகத் துறையில் விரும்பத்தக்க நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியது. மேலும், அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா அதிக அளவில் வரி விதிக்கிறது என்றும் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டினார்.

முன்னதாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீதான இறக்குமதிவரியை முறையே 25 சதவீதமாகவும், 10 சதவீதமாகவும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா அதிகரித்தது. அமெரிக்காவின் இந்தநடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வால்நட், பருப்பு வகைகள், இரும்பு, உருக்குப் பொருள்கள் உள்ளிட்ட 29 பொருள்கள் மீதான சுங்கவரியை இந்தியா அண்மையில் அதிகரித்தது. இதையடுத்து, வர்த்தக விஷயத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே உரசல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த சந்திப்பின் போது இந்த விவகாரம் குறித்து இருதலைவர்களும் பேசினர். அப்போது, நடந்து முடிந்த விஷயங்கள் குறித்துப் பேசவேண்டாம். இனி எதிர்காலத்தில் நடக்க இருப்பதைப் பேசலாம் என்ற மோடியின் கருத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, இரு நாடுகளின் வர்த்தக அமைச்சர்களும் விரைவில் சந்தித்து பேசுவதென்று முடிவெடுக்கப்பட்டது.

One response to “ஈரான் விவகாரத்தில் ஒன்றிணைந்து செயல்படுவது”