முத்தலாக் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என பிரதமர் மோடி புகழாரம் சூடியுள்ளார்.இஸ்லாமிய மதத்தில் தலாக் என மூன்றுமுறை கூறி, தனது மனைவியை ஒருவர் விவாகரத்து செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதனால், பாதிப்படைந்த பெண்கள் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்டோர் தொடர்ந்த 7 மனுக்கள்மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் தலைமையிலான நீதிபதிகள் ரோஹின்டன் நரிமன், உதய்லலித், ஜோசப் குரியன், அப்துல் நசீர் ஆகிய ஐந்துபேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மேமாதம் 18-ம் தேதி முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

அதில், நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். மூன்று நீதிபதிகள் ஒருகருத்தையும், இரு நீதிபதிகள் வேறொரு கருத்தையும் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் ரோஹின்டன் நரிமன், உதய்லலித், ஜோசப் குரியன் ஆகியோர் முத்தலாக் விவகாரம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர், நீதிபதி அப்துல் நசீர் ஆகியோர் முத்தலாக்கிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்.

முத்தலாக் என்பது இஸ்லாமியர்களின் தனிச்சட்டத்தின் ஒரு பகுதி, அது அவர்களது அடிப்படை உரிமை என்ம தெரிவித்த தலைமை நீதிபதி கெஹர், இதில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தில் ஆறு மாதத்துக்குள் சட்டம் இயற் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேசமயம், ஷரியத் சட்டத்தை மீறும்வகையில், புனிதகுரானின் கொள்கைகளுக்கு முத்தலாக் எதிரானது என நீதிபதிகளுள் ஒருவரான குரியன் தெரிவித்துள்ளார். மூன்று நீதிபதிகள் ஒரேகருத்தை தெரிவித்துள்ளதால், பெரும்பான்மை அடிப்படையில் அதுவே செல்லுபடியாகும். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சியைசேர்ந்த தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். முன்னதாக, இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்தை ஒழுங்கு முறை படுத்த சட்டத்தை இயற்றதயார் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

பிரதமர் மோடி:

முத்தலாக் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. இஸ்லாமிய பெண்களுக்கு சமத்துவத்தை இந்ததீர்ப்பு வழங்குகிறது. பெண் உரிமைக்கான சக்தி வாய்ந்த நடவடிக்கை இது என பிரதமர் மோடி புகழாரம் சூடியுள்ளார்.

பாஜக மத்தியஅமைச்சர் மேனகா காந்தி:

இந்ததீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். பாலின சமத்துவத்துக்கு இது உந்துகோல், பெண்களுக்கு இது நல்லவிஷயம்.

காங்கிரஸ் மனிஷ் திவாரி:

முற்போக்கான இந்ததீர்ப்பை சரியான முறையில் சிந்திக்கும் அனைத்து மக்களும் வரவேற்பர். இஸ்லாமிய பெண்களின் உரிமையை பாதிக்கும் ஒருபுள்ளி அகற்றப்பட்டுள்ளது.

இஸ்ரத் ஜஹான்:

இந்த வழக்கின் மனுதாரர்களுள் ஒருவரும், முக்கியமானவருமான மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இஸ்ரத் ஜஹான், இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், எனக்குநேர்ந்தது போன்று இனி வேறெந்த பெண்ணுக்கு நேராது எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு இஸ்ரத் ஜஹானை துபாயில் இருந்து தொலை பேசி மூலம் தொடர்புகொண்ட அவரது கணவர், முத்தலாக் கூறி விவாகரத்து செய்தார். அதன்பின்னர், அவரது வாழ்க்கை கடும் துயரங்களை கண்டது. அவருக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்ததீர்ப்பு என்னை போன்ற ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெண்களுக்கு உதவிபுரியும். இஸ்லாமிய பெண்கள் இனி தலைநிமிர்ந்து வாழலாம். அவர்களது உரிமையையும், சமநிலையும் அவர்கள் பெறுவார்கள் என நம்புகிறேன். எனக்கு நீதி கிடைத்துவிட்டது என இஸ்ரத் ஜஹான் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply