உணவுபொருளை வீணாக்குவதை குறைப்பதற்கு இந்தியா முன்னுரிமை கொடுத்து வருகிறது என்று மத்திய உணவு பதப்படுத்துதல்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறியுள்ளார். மிகப்பெரிய அளவில் உணவு பொருளை வீணாக்குவதற்கு எதிராக இந்தியா முனைப்புடன் செயல் படுவதாக கூறினார். மேலும் உணவு பதப்படுத்துதல் துறையில் முதலீடு மற்றும் தொழில் நுட்பங்களை வரவேற்பதாக அமெரிக்க தொழில் துறை தலைவர்களிடையே இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்க இந்திய உத்திசார் ஒப்பந்தநிறுவனம் (USISPF) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுகையில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

உலகளவில் அதிக உணவுபொருள் உற்பத்திசெய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பால் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது. பழங்கள் மற்றும் காய்கள் உற்பத்தியில் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தவிர 130 கோடி மக்கள்தொகை கொண்டுள்ளது. இதனால் பரந்த அளவில் இந்தியாவில் முதலீடுகள் மற்றும் இந்தியா -அமெரிக்க இணைந்து செயல் படுவதற்கான வாய்ப்பினையும் அளிக்கிறது என்றும் கூறினார்.

எனினும் இந்தியா தனது உணவு உற்பத்தில் தற்போது 10 சதவீதத்தினை மட்டுமே பதப் படுத்துகிறது. இதனால் மிகப்பெரிய அளவில் உணவுபொருள் வீணாகிறது.

பாதல் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சிகாகோ, வாஷிங்டன், நியூயார்க் நகரங்களில் விவசாயத் துறை, உணவு பதப்படுத்தல் துறை நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருகிறார். குறிப்பாக பெப்சிகோ, அமேசான், தி ஹெர்சே கம்பெனி, கோக-கோலா, வால்மார்ட், கிராப்ட் ஹென்ஸ், ஹனிவெல் உள்ளிட்ட பல நிறுவனங்களின் அதிகாரிகளையும் இந்தபயணத்தில் சந்திக்க உள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா உணவுபொருள் வீணாக்கலை குறைப்பதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரமும், மக்கள்தொகையும் வளர்ச்சியைடைந்து வருகிறது. இதற்கேற்ப இந்திய அரசு மிகப்பெரிய அளவில் இதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது என்றார்.

பாதலின் இந்த பயணத்தில் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான அழைப்பு மற்றும் தொழில் நுட்பங்கள் பகிர்வு, அமெரிக்க நிறுவனங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகளையும் இலக்காக வைத்துள்ளார்.

இந்தியாவின் உணவுதுறையில் பதப்படுத்தல் துறை 600 கோடி டாலர் மதிப்பு கொண்டுள்ளது. 70 சதவீத உணவுகள் சில்லரை வர்த்தகம் செய்யப்படுகின்றன. 2020-ம் ஆண்டில் இது மூன்றுமடங்காக வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியர்களின் வருமானத்தில் 40 சதவீதம் உணவுக்காக செலவுசெய்கிறார்கள்.

அடுத்த ஆறு ஆண்டுகளில் இந்தியர்கள் உணவுக்காக செய்யும் செலவு இரண்டுமடங்காக உயர உள்ளது.

இது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் அம்சமாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார். புது டெல்லியில் நவம்பர் 3-ம் தேதி முதல் 5-ம்தேதி வரை இந்திய உணவுகண்காட்சி நடைபெற உள்ளது.அதனையொட்டி உணவு பதப்படுத்துதல் துறையில் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்க்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

Leave a Reply