உதான் திட்டத்தின்கீழ் சென்னையிலிருந்து, தஞ்சாவூருக்கு விமானசேவை தொடங்கப்படவுள்ளது என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

உள்நாட்டு விமான சேவையை குறைந்தவிலையில் வழங்கவும், நாட்டின் பெரும்பான்மை பகுதிகளுக்கும் விரிவுபடுத்த கடந்த ஆண்டு ஏப்ரல்மாதம் உதான் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப் படுத்தியது. அந்த திட்டத்தின்படி, சிம்லா-டில்லி, கடப்பா-ஹைதராபாத், நந்தேட்-ஹைதராபாத் உள்ளிட்ட வழித்தடங்களில் விமான சேவை தொடங்கப்பட்டன. தற்போது, உதான் திட்டம் தொடர்பாக அசோக்கஜபதி ராஜூ ட்விட்டர் பதிவில், 'உதான் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக 73 புதியவிமான நிலையங்கள் மற்றும் ஹெலிபேட் தளங்கள் இணைக்கப்படும்.

அதன் மூலம் ஆண்டுக்கு 29 லட்சம்பேர் பயணிப்பார்கள். இந்தத் திட்டத்தில், உத்ரகாண்ட்டில் 15 விமான நிலையங்களும், உத்தர பிரதேசத்தில் 9 விமானநிலையங்களும், அருணாசல பிரதேசத்தில் 8 விமான நிலையங்களும் இணைக்கப்படும்' என்று பதிவிட்டுள்ளார். இந்தத்திட்டத்தின் கீழ், சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு விமான சேவை தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply