புதுப்பிக்கத்தக்க எரி சக்தி குறித்த இந்தியாவின் திட்டம், நீர்பாதுகாப்பின் அவசியம் குறித்து ஐநாவின் பருவநிலை மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். இன்று அவர் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து, இருதரப்பு பேச்சு வார்த்தையை நடத்த உள்ளார்.ஒருவார கால பயணமாக அமெரிக்கா சுற்றுப் பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, ஹூஸ்டனில் நேற்று முன்தினம் ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அவருடன் அதிபர் டிரம்பும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து, ஐநாவின் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அவர் நியூயார்க் புறப்பட்டார். நேற்று காலை நியூயார்க் ஜேஎப்கே சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த அவரை, ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் சயீத் அக்பரூதீன் வரவேற்றார்.

இந்நிலையில், ஐநாவின் 74வது பொதுச்சபை கூட்டம் நியூயார்க்கில் நேற்று தொடங்கியது. கூட்டத்தின் முதல்நிகழ்வாக, பருவநிலை மாற்றத்திற்கான மாநாடு நடைபெற்றது. ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டெரஸ் தலைமையில் நடந்த இம்மாநாட்டில், பிரதமர் மோடி உள்ளிட்ட 75 நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில், அடுத்த 5 ஆண்டுகளுக்கான பருவநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய சுகாதாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் ஒவ்வொரு நாடுகளின் பங்களிப்பு மற்றும் தீர்வுகள்குறித்து 63 நாட்டு தலைவர்கள் விளக்கிப் பேசினர். இதில், 4வது தலைவராக பிரதமர் மோடி உரையாற்றினார். அவர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் அவசியம் குறித்தும், அத்துறையில் இந்தியாவின் எதிர்கால திட்டம் குறித்தும் விளக்கினார். மேலும், பேரிடர் தடுப்புகட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான கூட்டணியை அமைக்கவும் பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். இந்தியா சந்தித்து வரும் தண்ணீர் பிரச்னை குறித்தும், தண்ணீர் பாதுகாப்பின் அவசியம்குறித்தும் வலியுறுத்தினார். இம்மாநாட்டில் 4வது தலைவராக பிரதமர் மோடி உரையாற்றி இருப்பதன் மூலம், உலகளாவிய பருவநிலை பாதுகாப்பில் இந்தியா முக்கிய பங்காற்றுவதை உணர்த்தும் வகையில் அமைந்திருப்பதாக இந்திய தூதர் அக்பரூதின் தெரிவித் துள்ளார். நேற்றைய முதல் கட்ட தலைவர்கள் பட்டியலில் அதிபர் டிரம்ப் பெயர் இல்லாத நிலையிலும், மோடி பேசும்போது அவர் மாநாட்டில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பருவநிலை மாநாட்டைத் தொடர்ந்து, முதல்முறையாக நடக்கும் உலகளாவிய சுகாதாரம் தொடர்பான உயர்மட்ட கூட்டத்தில் மோடி பங்கேற்று உரையாற்றினார். பின்னர், ஜோர்டன் மன்னர் இரண்டாம் அப்துல்லா, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையில் நடந்த தீவிரவாதம் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பை தடுப்பதற்கான ஆலோசனைகூட்டம் நடந்தது. குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் பங்கேற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டார். பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, அதிபர் டிரம்ப்புடனான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று நடக்க உள்ளது. இதில், காஷ்மீர் விவகாரம் குறித்தும் விவாதிக்கப்  படுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரம்ப் சந்திப்பைத் தொடர்ந்து, ஐநா தலைமையகத்தில் நடக்க உள்ள மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவில் மோடி பங்கேற்கிறார். ஐநா சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு தபால்தலை வெளியிடப்படுகிறது.

என்.ஆர்.ஐ.,களிடம் மோடி கோரிக்கை

ஹூஸ்டனில் ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘‘நீங்கள் எனக்கு ஏதாவது செய்யவேண்டுமென கருதினால், என் சிறிய கோரிக்கையை நிறைவேற்றுங்கள். உலகம் முழுவதும்வாழும் இந்தியர்கள், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 5 வெளிநாட்டு குடும்பத்தினரை இந்தியாவுக்கு சுற்றுலா அனுப்பி வையுங்கள்’’ என்றார். மேலும், இந்தியா, அமெரிக்கா உறவை வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

எம்பி மனைவியிடம் மன்னிப்பு கேட்டார்

‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் அமெரிக்க செனட்சபை உறுப்பினர் ஜான் கார்னினும் பங்கேற்றார். கார்னின் மனைவி சாண்டிக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். இதையறிந்த பிரதமர் மோடி, ஜான் கார்னினுடன் இணைந்து சாண்டிக்காக வீடியோ ஒன்றை வெளி யிட்டார். அதில், ‘‘பிறந்த நாளன்று உங்களின் கணவர் என்னோடு இருக்கவேண்டி வந்ததால் அதிருப்தி ஏற்படுவது சகஜமே. அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், எதிர்க்காலம் வளமாகவும் அமைதியாகவும் இருக்க வாழ்த்துகிறேன்’’ என கூறி உள்ளார்.

Comments are closed.