உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற பெருமையை பாஜக பெற்றுள்ளது, அதுவும் மக்களுக்கு தொண்டாற்றும் கட்சி என கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா கூறினார்.

பாஜக 1980-ம் ஆண்டு இதேநாளில் தொடங்கபட்ட நிலையில் கட்சியின் 40-ம் ஆண்டு நிறுவன நாள் தினத்தை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில்
இது குறித்து ஜே.பி.நட்டா கூறியதாவது:

பாஜகவின் 40-வது நிறுவன நாள் தினத்தை முன்னிட்டு கட்சிதொண்டர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற பெருமையை பாஜக பெற்றுள்ளது. அதுவும் மக்களுக்கு தொண்டாற்றும் கட்சி. இந்தகட்சியில் இணைந்து பணியாற்றுவதை எண்ணி பாஜகவினர் அனைவரும் மகிழ்ச்சிகொள்வோம்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் போராடிவரும் வேளையில் பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவும் போராட்டம் நடத்திவருகிறது. பிரதமர் மோடி ஆற்றிவரும் பணிகளை கண்டு உலகமே உற்று நோக்குகிறது. விரைவில் நாம் இந்த போராட்டத்தில் வென்று மீளுவோம். இவ்வாறு ஜேபி.நட்டா கூறினார்.

 ஜே.பி.நட்டாவின் வழிகாட்டுதல் பின்வருமாறு..

*அனைத்து பாஜக அலுவலகங்களிலும் , ஒவ்வொரு பாஜக நிர்வாகிகளின் வீடுகளிலும் புதியகட்சி கொடிகளை ஏற்றி வையுங்கள். கொடி ஏற்றும்போது, சமூகவிலகலை கடைபிடியுங்கள்.

*டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி மற்றும் தீன்தயாள் உபாதயா ஆகியோரின் திருவுருவ புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்துங்கள்.

*ஊரடங்கால் மக்களின் கஷ்டங்களை உணர்ந்து அனைத்து பாஜக நிர்வாகிகளும் நிறுவன நாளில் ஒருவேளை உணவை மக்களுக்கு வழங்கவேண்டும்.

*ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தின்கீழ் சுமார் 5 நபர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்குங்கள்.

*அடுத்த ஒருவாரத்தில், நமது சாவடியில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் வீட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு முகக்கவசங்களை வழங்குங்கள்.

*வீட்டிலேயே முகக்கவசங்களை தயாரித்தல்முறை மற்றும் விநியோகிப்பது தொடர்பான வீடியோக்களை #WearFaceCoverStaySafe என்ற ஹாஸ்டாக்கில் பகிரச்செய்யுங்கள்.

*ஒவ்வொரு பாஜக நிர்வாகியும் சுமார் 40 பேரை PM-CARES நிதிக்கு தலா 100 ரூபாய் நிதியுதவி அளிக்குமாறு வலியுறுத்தவேண்டும்.

*ஒவ்வொரு சாவடியிலும் உள்ள 40 வீடுகளுக்கு பாஜக நிர்வாகிகள் நேரில்சென்று, அவசரகால ஊழியர்களுக்கு அளிக்கப்படும் நன்றி கடிதங்களில் கையெழுத்துகளை வாங்கவேண்டும். கொரோனா ஊரடங்கின் போதும் அயராது சேவை புரிந்து வரும் காவல்துறை, மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், வங்கி மற்றும் தபால்துறை ஊழியர்கள், துப்பரவு பணியாளர்கள் ஆகியோருக்கு கையெழுத்திடப் பட்ட நன்றி கடிதங்களை நேரில் சென்று வழங்கவேண்டும்.

*பாஜக கட்சி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பற்றிய புத்தகங்களை படிக்க வேண்டும்.

Comments are closed.