ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள் நாட்டுப் பாதுகாப்பு செலவினங்களுக்காக மத்திய அரசு ரூ.10,132 கோடி ஒதுக்கீடுசெய்துள்ளது.

கடந்த செப்டம்பர் 27-ம்தேதி அறிவிக்கப்பட்ட, போலீஸ் படைகளை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் 2017-18 முதல் 2019-20 வரையிலான 3 ஆண்டுகளுக்கு இத்தொகை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மக்களவையில் நேற்று மேலும் கூறும் போது, “ரூ.25,061 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில் மத்திய ஒதுக்கீடுமட்டும் ரூ.18,636 கோடியாகும். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, நவீன ஆயுதங்கள் பயன்பாடு, போலீஸ்படைகளின் இடம் பெயர்வு, போலீஸ் படைகளுக்கு தேவையான பிற உதவிகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களை இத்திட்டம் கொண்டுள்ளது.

நக்சல் வன்முறையால் மிகவும்பாதிக்கப்பட்ட 35 மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.3,000 கோடி வழங்கப் படும். வடகிழக்கு மாநிலங்களில் போலீஸ் படைகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பயிற்சிமையங்கள் மற்றும் பிற வசதிகளுக்காக ரூ.1,215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், ஜம்முகாஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சவால்களை எதிர் கொள்ளும் அரசின் ஆற்றல் மேம்படும்” என்றார்.

Leave a Reply