மனித உரிமைகள் கழகத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரிமாநில, மாவட்ட, ஒன்றிய, நகரநிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. இதற்கு தலைவர் சுரேஷ்கண்ணன் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் பழனி வரவேற்றார்.

 

இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

 

அனைத்து கிராமங்களுக்கும் மின்இணைப்பு வழங்கப்பட்டு, இந்தியாவை மின் மிகை மாநிலமாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார். வங்கியில் கணக்குதொடங்க வேண்டும் என்றால் சிறியதொகை டெபாசிட் செய்ய வேண்டும். ஆனால் பணம் எதுவும் டெபாசிட் செலுத்தாமல் வங்கிகணக்கு இல்லாத அனைவருக்கும் வங்கி கணக்கு இன்றைக்கு தொடங்கப்பட்டுள்ளது.

 

திறன்மேம்பாட்டு பயிற்சி 1 கோடிபேருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க ஒருநபருக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு பிணை எதுவும் தேவையில்லை. ஆனால் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடன் பெற பிணை தேவைப்படுகிறது.

 

இத்திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் அதிக கடன்பெற்றுள்ளனர். இவற்றை எந்த அரசியல் கட்சியினராவது பேசியது உண்டா?. அதுவும் 70 சதவீதம் கடன் பெற்றவர்கள் பெண்கள் தான். வீடு இல்லாதவர்களுக்கு 2022–ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை மத்தியஅரசு செயல்படுத்தி வருகிறது.

 

1 கோடியே 10 லட்சம் பேர் எரிவாயு மானியத்தை விட்டுகொடுத்துள்ளனர். இந்த மானியத்தின் மூலம் 8 கோடி குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி செய்த சாதனைகளை சொல்லிக் கொண்டே செல்லலாம்.

 

பா.ஜனதா, ஒவ்வொரு வீடுகளிலும், ஒவ்வொரு வருடைய இதயத்திலும் இருக்கக் கூடிய கட்சி. உங்கள் குடும்பம் முன்னேற்றம் அடைய, உங்கள் குழந்தைகளின் எதிர் காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் பா.ஜனதாவுக்கு தான் ஆதரவுகொடுக்க வேண்டும். ஊழலற்ற, நேர்மையான, வளர்ச்சிக்கான ஆட்சியை பா.ஜனதாவினால் மட்டும் தான் தர முடியும்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

One response to “ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை பா.ஜனதாவினால் மட்டுமே தர முடியும்”

Leave a Reply