ஊழல் செய்ததற்காக சிறைசென்ற ஒரே முதல்வர் ஜெயலலிதாதான் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கடுமையாக தாக்கியுள்ளார்.
 

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோட்டில் பாஜக. தேர்தல்பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் பேசும்போது, ''மத்திய அரசின் பலதிட்டங்களை அதிமுக. அரசு தான் கொண்டுவந்த திட்டம் என்று கூறி மக்களை ஏமாற்றிவருகிறது.

தமிழகத்தில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. ஆனால் தென்னை விவசாயிகளுக்கு மானியம் ஏதும் வழங்கப் படுவதில்லை. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப் படும் பாமாயிலுக்கு 27 ரூபாய் மானியம் தமிழக அரசு வழங்குகிறது. மலேசிய விவசாயிகளுக்கு நன்மைசெய்யும் தமிழக அரசு, சட்டசபை தேர்தலில் மலேசிய விவசாயிகளிடம் தான் ஓட்டுகேட்க வேண்டும். தமிழக விவசாயிகளிடம் ஓட்டு கேட்கக்கூடாது.

ரேஷனில் வழங்கும் அரிசிக்கு 25 ரூபாய்க்கு மேல் மத்திய அரசு மானியம் வழங்கிவருகிறது. ஆனால் வெறும் 3 ரூபாய் மட்டும் செலவிட்டுவிட்டு தாங்கள்தான் அனைத்து செலவுகளும் செய்கிறோம் என்று பொய்பிரசாரம் செய்து வருகின்றனர். இதேபோல் வெள்ள நிவாரணத்துக்கு மத்தியஅரசு வழங்கிய நிதியை தமிழக அரசு தாங்கள் வழங்கியதுபோல் தவறான பிரசாரம் செய்துவருகிறார்கள்.

திமுக–காங்கிரஸ் கூட்டணியை ஊழல்கூட்டணி என்று சொல்லலாம். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்தது. காற்றில், நிலத்தில் மட்டும் அல்லாமல் பாதாளத் தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. நிலக்கரி சுரங்கத்தை ஏலம்விடுவதிலும் பல லட்சம்கோடி ஊழல் நடந்து உள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சிவந்ததும் 2ஜி அலைக்கற்றையை பொது ஏலத்தில்விட்டது. இதன் மூலம் ரூ.1 லட்சத்து 96 ஆயிரம்கோடி வருவாய் கிடைத்துள்ளது. நிலக்கரி சுரங்க ஏலம்மூலம் ரூ.3 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இந்திய அளவில் மாற்றம் வந்துள்ளது. ஏன் தமிழகத்தில் மாற்றம் வரக்கூடாது.

ஊழல் செய்ததற்காக சிறைசென்ற ஒரே முதல்வர், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உள்ளார். தற்போது உச்ச நீதிமன்றத்தில் அவரது வழக்கு நடந்துவருகிறது. ஊழல் ஆட்சிகள் மீண்டும் வேண்டுமா? ஊழலற்ற–நிர்வாக திறமையான ஆட்சி வரவேண்டுமா என்பதை நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்" என்றார்.

Leave a Reply