நாட்டில் எஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது என மத்திய எஃகுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

‘தற்சார்பு இந்தியா: ஊரக பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் எஃகு பயன் பாட்டை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்குக்கு எஃகுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய எஃகுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணையமைச்சர் ஃபக்கான்சிங் குலாஸ்தே, வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:

எஃகுத் தேவையை அதிகரிக்க, ஊரகபகுதியில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எஃகு, வேளாண்துறை, ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத் துறையைச் சேர்ந்தவர்களை இந்த இணைய கருத்தரங்கில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வேளாண் கட்டமைப்பு நிதி ரூ.10,000 கோடியை, முன்னுரிமை பிரிவில் இணைக்கப்பட்ட பல புதிய பிரிவுகளுக்கு வழங்கும்பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. நாடுமுழுவதும் 5000 பயோ-கேஸ் ஆலைகள் உருவாக்கப்படுகின்றன.

இதை முன்னுரிமை பிரிவில் ரிசர்வ்வங்கி சமீபத்தில் சேர்த்துள்ளது. அரிசியிலிருந்து எத்தனால் எடுக்கும் பணியிலும் நாம் ஈடுபட்டுள்ளோம். அனைவருக்கும் வீடுதிட்டம், கிராம சாலைகள் முதலீடுதிட்டம், ரயில்வே கட்டமைப்பு மேம்பாடு, விவசாயத் துறைக்கான உந்துதல் ஆகியவை எஃகுத் தேவையை அதிகரிக்கும். நாட்டில் எஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், கிராமப்புற இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது. இது ஊரகவளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை உறுதிசெய்யும்.இவ்வாறு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசுகையில், ‘‘தற்சார்பு இந்தியாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி விடுத்த அழைப்பு, தற்சார்பு கிராமங்கள் வழியாகச் செல்கிறது. கிராமங்கள் மற்றும் தற்சார்பை வலுப்படுத்துவதில் எஃகு முக்கியபங்கு வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, ஊரக தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஊக்கமளிப்பதாக உள்ளது. அரசின்கொள்கை திட்டங்களால், கிராம மக்களின் செலவு திறன் மேம்பட்டுள்ளது. ஊரக பொருளாதாரம் வளர்வது, சிறந்த எஃகு பயன் பாட்டுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்”, என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஃபக்கான் சிங் குலாஸ்தே, ‘‘ கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு பலநடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறினார்.

Comments are closed.