இரண்டாம் முறையாக நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் நடந்த பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அவருடன் புதிய அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். பாரதிய ஜனதா கட்சி யின் தலைவரான அமித் ஷா முதன்முறையாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங், பிரகாஷ்ஜவடேகர், பியூஷ்கோயல், ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி, சதானந்த கௌடா ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்ற பாஜக தலைவர்களுள் முக்கியமான வர்கள். முன்னாள் வெளியுறவுச் செயலரும் சிங்கப்பூருக்கான முன்னாள் இந்தியத் தூதருமான எஸ்.ஜெயசங்கரும் அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.

பாஜக 303 இடங்களுடன் தனிப்பெரும் பான்மை பெற்றபோதும் கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடமளித்து உள்ளது. பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மட்டும் அரசில் அங்கம் வகிக்க மறுத்துவிட்டது.

அவர்கள் கேபினட் அமைச்சர் அந்தஸ்திலான இரண்டு அமைச்சர்கள்தங்கள் கட்சிக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டதாகவும், இதுகுறித்து பாரதிய ஜனதா யோசிப்பதாகவும், எனவே அவர்கள் கூட்டணியில் இடம்பெறவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

2014ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று பீகாரில் தனித்து களம் கண்ட நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இரண்டு பாராளுமன்ற தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில், லல்லு பிரசாத் மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஆட்சி அமைத்தது. இதில் 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 73 தொகுதிகளிலும், லல்லு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 79 தொகுதிகளிலும் காங்கிரஸ் 27 தொகுதிகளிலும் பாஜக 55 தொகுதிகளிலும் வெற்றி கண்டன.

இருப்பினும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் ஊழல் மற்றும் சட்டவிரோத விதிமீறல்கள் உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த முடியாமல் கதிகலங்கிய நிதீஷ் குமார் 2017 ஆம் ஆண்டு மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைத்தார்.

இந்நிலையில் தற்போது பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட 17 தொகுதிகளில் 16 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்ட 17 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி போட்டியிட்ட ஆறு தொகுதிகளிலும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.அதாவது மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுகுறித்து பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறுகையில் தாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து இருப்பதாகவும் எங்களுடைய ஆதரவு என்றும் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.