வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் பட்டியலுடன் தமிழக பாஜக. தலைவர்கள் இன்று டெல்லி செல்வதாக டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார்.

பாஜக.வின் உயர்மட்டக் குழு கூட்டம் சென்னை கமலாலயத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, அகில இந்திய இணை அமைப்புசெயலாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார்.

இதில் தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல், கூட்டணி கட்சிகளின் பட்டியல் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிவில், தமிழக பாஜக. தலைவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க.வுடன் எந்தகட்சிகள் இணைய விரும்புகிறதோ? அந்த கட்சிகளுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியாக பாஜக. தலைமையில் இந்ததேர்தலை சந்திக்கிறோம். மக்கள் விரும்பும் கூட்டணியாக பாஜக. இருக்கிறது.

அதிமுக., திமுக. மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டன. மக்கள்நல கூட்டணி எந்த வித அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மக்கள் நம்பிக்கையோடு பார்க்கும்கூட்டணி பாஜக. மட்டும் தான். அதனால் நாங்கள் மக்களை நோக்கி அசுர பலத்தோடு களத்தில் இறங்குகிறோம்.

வேட்பாளர்கள் தேர்வுசெய்யும் பணி பலக்கட்டங்களாக நடந்தது. தமிழக பா.ஜ.க. தலைவர்கள் இன்று வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் பட்டியலுடன் டெல்லி செல்ல இருக்கிறோம். டெல்லியில் தேர்தல் குழு கூட்டம் நடக்கிறது. இதில் எங்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.


ஏற்கனவே இருந்தகூட்டணி அமையாவிட்டாலும், இருக்கும் கூட்டணியை வைத்து போட்டியிடுகிறோம். மிகச்சிறப்பான தேர்தல் அறிக்கை தயாராகிவருகிறது. அடுத்த மாதம்(ஏப்ரல்) முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

கூட்டணி அமையாததற்கு காரணம், தன்னை பற்றியும், சுய நலமாக முதல்-அமைச்சரை அறிவிப்பதிலேயே கட்சிகள் குறியாக இருப்பதால், மக்கள் நலன் புறம் தள்ளப்பட்டு இருக்கிறது. மக்கள் நல கூட்டணியில் மக்கள் நலன் புறம்தள்ளப்பட்டு ‘கேப்டன் விஜய காந்த் அணி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. மக்கள் நலன்காக்கும் கூட்டணியாக பாஜக. இருக்கும்.

வைகோ ஒரு இடங்கள்கூட பாஜக.வுக்கு கிடைக்காது என்று கூறி இருக்கிறார். அப்படி இல்லை. பாஜக.வுக்கு ஆதரவு பெருகிவருகிறது. தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவோம். எங்களுடைய களப் பணியையும், மக்கள் நலப் பணியையும் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply