ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த வரும் பாஜக தேசியச்செயலர் எச்.ராஜாவின் தந்தையுமான எஸ்.ஹரிஹரன் (88) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் சனிக்கிழமை (செப்.30) இரவு காலமானார்.


அவருக்கு எச். ராஜா உள்பட 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். 1929-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் கிராமத்தில் பிறந்த ஹரிஹரன், இளம் வயதிலேயே தன்னை ஆர்எஸ்எஸ். இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர். 


1948-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் இயக்கம் தடை செய்யப்பட்ட போது, ஆறுமாதம் சிறையில் இருந்தார்; அப்போது பாஜக முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ஜனா கிருஷ்ண மூர்த்தி இருந்த சிறை அறையில் ஹரிஹரனும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கல்வித்துறையில் சாதனையாளர்: யோகா நிபுணர், உடற்பயிற்சி கல்வியில் சிறந்து விளங்கி தங்கப் பதக்கம், உடற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உதவ 5 பாட நூல்களின் ஆசிரியர், வர்மா-ஃபிஸியோதெரப்பி சிகிச்சையில் சிறந்து விளங்கி பக்கவாத நோயாளிகளுக்கு உதவியவர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் சிறந்த கல்வியாளருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்டவை மறைந்த ஹரிஹரனுக்கு பெருமை சேர்ப்பவையாகும்.

Leave a Reply