சட்ட சபையில் ஆளும் கட்சிக்கு எதிராக  தெளிவாக விவாதிக்க வேண்டிய எதிர்க் கட்சி, தனது பொறுப்பில் இருந்து விலகி அ.தி.மு.க.விற்கு ஆதரவாக சட்ட சபையை புறக்கணித் திருக்கின்றார்களோ என்று மிகப்பெரிய சந்தேகம் கிளப்பியிருக்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

இதுதொடர்பாக மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "கடந்த இரண்டு நாள்களாக தமிழக சட்ட சபையில் நடந்துவரும் கேலிக்கூத்தை பார்க்கும் போது, எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. இழந்து நிற்கின்றது. தமிழக சட்டசபையில் மிக முக்கியமான பிரச்சனை குறித்து விவாதங்கள் நடந்துவருகின்றன.

இந்தவேளையில் அந்த பிரச்னைகள் குறித்து சட்டசபையில் ஆளும் கட்சிக்கு எதிராக தெளிவாக விவாதிக்க வேண்டியது எதிர்க் கட்சியின் பொறுப்பு. ஆனால் எதிர்கட்சி தனது பொறுப்பில் இருந்துவிலகி, அ.தி.மு.க.விற்கு ஆதரவாக சட்டசபையை புறக்கணித் திருக்கின்றார்களோ என்ற மிகப் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகிய மூன்று கட்சிகளும் தவறிழைத்தில் சமஅளவு பங்கு கொண்டுள்ளன. இந்த காரணத்தினால் சட்ட சபை விவாதங்கள் மூலமாக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருந்து தப்பிக்கிறார்கள் என்ற சந்தேகம் மக்கள்மனதில் மேலோங்கி நிற்கின்றது. அதற்கு இந்தமூன்று கட்சிகளும் பதில் சொல்லியே ஆக வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply