எந்த கட்சியையும் பாஜ பழிவாங்காது என்று கோவில்பட்டியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காதிகிராப்ட் கட்டிட திறப்புவிழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோவில்பட்டி வழியாக காரில்சென்றார். அவருக்கு கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி அருகே தேசியநெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: டிடிவி.தினகரன் மீது மாநில அரசு வழக்குதொடர்ந்துள்ளது. இந்த வழக்கு குறித்து கருத்துசொல்ல விரும்பவில்லை. இவ்வழக்கு பற்றி அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எந்த கட்சியையும் பாஜ பழிவாங்காது. அந்தமாதிரி நடவடிக்கை எடுப்பதை நாங்கள் விரும்ப மாட்டோம்.

இந்தியாவில் மிகப் பெரிய மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. இம்மாநிலத்தில் உள்ள தாஜ்மகாலை சுற்றுலா பட்டியலில் இருந்து நீக்கியதற்கு எந்தவித உள்நோக்கமும் இருப்பதற்கானவாய்ப்புகள் இல்லை. தாஜ்மகாலை சுற்றுலா பட்டியலில் இருந்து அம்மாநில அரசு நீக்கியது தொடர்பான உண்மையான நிலை என்ன என்பதை தெரிந்தபிறகுதான் கருத்து கூற முடியும். ஆனால் தாஜ்மகாலுக்கு இருக்கக்கூடிய மரியாதை என்றைக்குமே இருக்கும்.


சினிமா துறைக்கு மாநில அளவில் போடக்கூடிய வரி தான் இரட்டை வரிவிதிப்பாகும். ஒரு காலத்தில் சினிமா துறையில் மும்பைக்கு நிகராக முதல் நிலையில் தமிழக சினிமாத்துறை இருந்து வந்தது. அந்நிலையை தமிழக சினிமாத்துறை இழக்காமல் இருப்பதற்கு மாநிலஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply