இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜிஜின்பிங் ஆகிய இருவரும் கடந்த இருநாள்களாக சென்னையில் நடந்த பல்வேறு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். சுமார் 63 ஆண்டுகளுக்குப் பிறகு, சீன அதிபர் ஒருவர் தமிழகம் வந்திருந்தது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப் பட்டது.

சீன அதிபரும் இந்தியப் பிரதமரும், முதல்நாள் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்பின் போது, யாரும் எதிர்பார்க்காத விதமாகப் பிரதமர் மோடி, தமிழர்களின் கலாசாரமான வேட்டிசட்டை அணிந்துவந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இது, தமிழர்கள் உட்பட இந்திய மக்களின் வரவேற்பைப்பெற்றது.

மறுநாள், இரு நாட்டுத் தலைவர்களும் கோவளத்தில் உள்ள தனியார் ஹோட்டலில், காலை 10 மணிக்கு நேரில் சந்தித்துப்பேசினர். இவர்களின் சந்திப்புக்கு முன்னதாக மோடி, கோவளம் கடற்கரையில் நடைப் பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது, கடற்கரையிலிருந்த குப்பைகளை அள்ளி தூய்மைப் படுத்தினார். இந்தவீடியோவை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “நாம் இருக்கும் இடத்தை சுத்தமாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

மோடி வெளியிட்டிருந்த வீடியோவும் அவரின் புகைப்படங்களும் தேசியளவில் கவனம் ஈர்த்தது. அவருடன் சேர்ந்து, பிரதமர் கையில் வைத்திருந்த கருவி பற்றியும் அதிகமாக பேசப்பட்டது. அது என்ன கருவி? பிரதமர் எதற்காக அதைக்கையில் வைத்துள்ளார்” எனப் பலரும் பிரதமரின் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது, அந்தக் கேள்விக்கு மோடியே பதில் அளித்துள்ளார்.

“மகாபலிபுரம் கடற்கரையில் நான் நடைப் பயிற்சி மேற்கொண்டபோது, என் கையில் வைத்திருந்த கருவி குறித்து பலரும் நேற்றுமுதல் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அது, நான் அடிக்கடி பயன்படுத்தும் அக்குபிரஷர் ரோலர் கருவி. அது, எனக்கு மிகவும் உதவியாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.