சிவன் ஜி, உண்மையில் சொல்கிறேன், விக்ரம் லேண்டர் தரையிறங்கி, உங்களை உலகமே புகழ்ந்திருந்தாலும் இப்போது உங்கள் மீது ஏற்பட்டுள்ள பாசமும், பரிவும், மரியாதையும் நிச்சயம் அடியேனுக்கு ஏற்பட்டிருக்காது.

சிவன் ஜி, இந்த நாட்டின் வளங்களை எத்தனையோ பேர், எத்தனையோ விதங்களில் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தனையும் விழுங்கிக் கொண்டு ஆளுமை செய்கிறார்கள், அராஜகம் செய்கிறார்கள், ஊழலில் மலிகிறார்கள், சமூகத்தை பிரிக்கிறார்கள், பிழைக்கிறார்கள், சிரிக்கிறார்கள்.

ஆனால் நீங்களோ அயராத உழைப்பால், இந்த நாட்டின் பெருமதிப்புமிக்க ஒரு அமைப்பிற்கு தலமை தாங்கி, 130 கோடி மக்களின் வாழ்க்கை தரத்தை, தன்னம்பிக்கையை, கௌரவத்தை உயர்த்தி வருகிறீர்கள். அல்லும் பகலும் பாடுபட்டு ஒரு செயற்கைக் கோளை பல லட்சம் கிலோமீட்டர்கள் தூரம் செலுத்தி, நிலவை சுற்ற வைத்து, அதிலிருந்து நுட்பமாக லேண்டரை பிரித்து, உலகின் புருவங்களை உயர்த்த வைத்து, வெறும் 2.1 கிலோமீட்டர்களில் அது விலகி சென்றதை தோல்வி என கருதி கண்ணீர் விடுகிறீர்கள்.

எப்படிப்பட்ட ஒரு தேசபக்தனாக நீங்கள் இருக்க வேண்டும் ஐயா ? உண்மையில் லேண்டர் தவறிய போது கலங்கியதை விட ஆயிரம் மடங்கு நீங்கள் கண் கலங்கிய போது கலங்கிப் போனேன். உங்களை போன்ற தேச பக்தர்கள் இருக்கையில் எங்களுக்கெல்லாம் ஏது குறை ?

சாதிப்பீர்கள் ஐயா, முன்னெப்போதும் இல்லாத வகையில் சாதிப்பீர்கள். தேசத்தை உலகரங்கில் தலை நிமிர வைப்பீர்கள். ஏனென்றால் உங்களை போன்ற ஒரு உண்மையான தேசபக்தன் நிச்சயமாக தோல்வியை தோலுரித்து, வெற்றியை வேட்டையாடுவான். இந்த பாரத மண்ணின் அத்தனை தெய்வங்களும், அத்தனை ஆன்மீக சக்தியும் உங்களோடு நிற்கும். ஒவ்வொரு நிஜ இந்தியனும் உங்கள் அர்ப்பணிப்பில் ஆட்பட்டு விட்டான். இனி வரும் காலம் இஸ்ரோவின் காலம், ஆகையால் இந்தியாவின் காலம். வெற்றி மீது வெற்றி வந்து நம் நாட்டை சேரும், அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்களை சேரும்
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

Comments are closed.