மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, ஜப்பான் நிறுவனத்திடம் கடன்பெறும் பணி 2021 மார்ச் மாதத்திற்குள் நிறைவுபெறும். அதன்பின்னர் 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிதிஒதுக்கி, பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வருவதில் தமிழக அரசுக்கு விருப்பம் இல்லையா? எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான நிலம் தமிழக அரசு இன்னும் ஒப்படைக்க வில்லை என தகவல்கள் வருகின்றன. 2 ஆண்டுகள் ஆகியும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாதது ஏன்? வழக்கில் இரண்டு மாதங்களாகியும் முறையாக பதில்தராதது வருத்தம் அளிக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், சுகாதார செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராக உத்தரவிடநேரிடும் என தெரிவித்தது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் கையக படுத்துவதில் சில பிரச்னைகள் உள்ளதால், காலதாமதம் ஏற்படுகிறது என தெரிவித்தார். அரசு கூடுதல் வழக்கறிஞர் ஆஜராக அவகாசம் கேட்கப் பட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், வழக்கு விசாரணை துவங்கியபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 200 ஏக்கர் நிலம் கையகபடுத்தப்பட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசு கூடுதலாக கேட்ட 22 ஏக்கர் நிலமும் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. நிலம் ஒப்படைப்பதற்கான ஆவணங்களையும் நவம்பர்மாதம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

மத்திய அரசு வழக்கறிஞர் கூறுகையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, ஜப்பான் நிறுவனத்திடம் கடன்வாங்கும் பணிகள் 2021 மார்ச் மாதத்திற்குள் நிறைவுபெறும். அதனை தொடர்ந்து 45 மாதங்களில் கட்டிமுடிக்கப்படும் என தெரிவித்தார்.

 

Comments are closed.