பல்வேறு நலத்திட்டங்கள் மூலம், ஏழைகள் தன்னம்பிக்கையுடன் வாழ உதவி வருபவர் பிரதமர் நரேந்திர மோடி என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


 ஏழைகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் முத்ரா கடன்திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக முத்ராகடன் ஊக்குவிப்புத் திட்ட முகாமின் தொடக்கவிழா, சென்னை கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முத்ரா திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினார். பின்னர், ஏற்கெனவே இந்தத்திட்டத்தில் கடனுதவி பெற்று குறு }சிறு }நடுத்தர தொழிலை சிறப்பாக மேற்கொண்டுவரும் பயனாளிகள், தாங்கள் எப்படி வெற்றிபெற்றோம் என்பது குறித்து விளக்கும் நூலையும் அவர் வெளியிட்டார். 


நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது:  ஜன்தன் திட்டம் (அனைவருக்கும் வங்கிக்கணக்கு), ரூ }பே அட்டை வழங்கும்திட்டம் என ஏழைகளுக்காக, பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும் ஏழை, எளியமக்கள் சுயதொழில் தொடங்கி, அதன் மூலம் அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழும்வகையில்,  முத்ரா திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.


வங்கி அதிகாரிகள் இதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தமிழக அரசும் இந்தத்திட்டத்தை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வரும்காலங்களில் இந்த சிறப்புக் கடனுதவி முகாம் மாவட்டந்தோறும் நடத்தப்படவேண்டும். அதனை அனைவரும், குறிப்பாக பெண்கள் பயன் படுத்திக் கொள்ளவேண்டும் என்றார் நிர்மலா சீதாராமன்.

 

Leave a Reply