ஒக்கி புயலால் தமிழகம், கேரளம், லட்சத் தீவுகள் ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் உள்பட 1,540 பேர் இது வரை மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய நெருக்கடிகால மேலாண்மை குழுவின் கூட்டம் மத்திய அமைச்சரவை செயலர் பிகே.சின்ஹா தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அந்தக்கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒக்கிபுயலால் தமிழகம், கேரளம், லட்சத் தீவுகள் ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் உள்பட 1,540 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 243 மீனவர்கள் தமிழ்நாட்டையும், 250 மீனவர்கள் கேரளத்தையும், 1,047 பேர் லட்சத் தீவுகளையும் சேர்ந்தவர்கள்.
தமிழகம், கேரளம் மற்றும் லட்சத் தீவுகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வர்களுக்கு நிவாரணப் பொருள்களை அந்தந்த மாநில அரசு நிர்வாகங்கள் அளித்துள்ளன. நிலைமையை கையாள அவை உரிய நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு 10 கடலோர காவல்படை கப்பல்கள், 6 விமானங்கள், 4 ஹெலி காப்டர்கள், 10 கடற்படைக் கப்பல்கள் ஆகியவற்றை ஈடுபடுத்தியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.