யோகா என்றால் ஒன்றோடு ஒன்றாக இணைவது என்று பொருள். அது மனதோடு உடல் இணைவது, இறைவனோடு நாம் இணைவது அல்லது ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கின்ற ஆண் மற்றும் பெண் சக்திகள் இணைவது என்று பல வகையில் எடுத்துக் கொள்ளலாம். ஆதிக்கு சமமான நிலையான சமாதி நிலையை அடைவது தான் யோகாவின் குறிக்கோள்.
 

இறப்பு என்பது என்ன?

உடலளவில் நிகழும் இறுதி நிகழ்ச்சி தான் இறப்பு என்று எண்ணுகிறோம். உடலளவில் நிகழ்வது உண்மையான இறப்பு அல்ல. உண்மையான இறப்பு என்பது உடல் உள்ள போது ஆன்மாவுக்கும், நம் மனதுக்கும் நம்மால் நிகழ்வது தான். நம்மில் நிறைய பேர் இறந்து பல காலம் ஆன பின் அடக்கம் செய்யப்படுகின்றனர். அப்படியென்றால் அவர்கள் உடல் இறப்பதற்கு பல காலம் முன்னரே உண்மையாக மனதளவில் இறந்து விடுகின்றனர். நான் சொல்லும் யோகா என்பது இந்த மனதளவில் நிகழும் மரணத்தை மட்டும் தான் வெல்லும். உடல் நிலையற்றது; உடல் அழிவை 
தடுக்க முடியாது.
 

யோகாவின் அம்சங்கள்:

யோகா என்பது ஆசனம், பிரணாயாமம், தியானம் என்ற மூன்றையும் உள்ளடக்கியது. நம் உடலானது நீர், நிலம், வாயு, நெருப்பு மற்றும் ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களால் ஆனது. இங்கு ஆகாயம் நம் மனதை குறிப்பது தான். நாம் செய்யும் பயிற்சியானது நமது தசை, எலும்பு, ரத்தம், உள்ளுறுப்புகளின் இயக்கம் மற்றும் ரத்தத்தை சீராக இயங்க வைக்க வேண்டும். யோகாவில் உள்ள ஆசனம் நமது தசை, எலும்பு மற்றும் உள்ளுறுப்புகளின் இயக்கத்தை பலப்படுத்தும். எனவே நமது வாழ்க்கைக்கு தேவையான முழுமையான பயிற்சி யோகா மட்டுமே. யோகா மதம் சார்ந்தது கிடையாது.
 

யோகாவின் வரலாறு:

5,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பதஞ்சலி என்ற முனிவர் தோற்றுவித்தது தான் யோகாசனம். பிற்காலத்தில் பலர் தோன்றி (புத்தர் உட்பட) இந்த யோகாசனத்தில் பல மாறுதல்களை செய்தனர். அதில் பி.கே.எஸ்.அய்யங்கார் மிகவும் பிரபலமானவர் என்பதை நாம் அறிவோம். ஒரு சிலர் மூச்சுப் பயிற்சியை மட்டும் பிரபலப்படுத்தியுள்ளனர். அதில் ஓஷோவும் அடங்குவார். அடுத்து நம் உடற்கூறுகளைப் பற்றி நோக்குவோம்.
 

சக்கரங்கள் (ஆதாரங்கள்):


நமது ஏழு இடங்களில் சக்கரங்கள் எனப்படும் சக்தி நிலை உள்ளது. முதல் நிலை மூலாதாரம். இதுவே மிகவும் கீழான நிலை, ஏழாவது நிலையான சகஸ்ரார் என்பது நமது உச்சந்தலையில் உள்ளது ஆகும். மேலும் நமது உடலில் நாளமில்லா சுரப்பிகளின் தலைவனான பிட்யூட்டரி சுரப்பி நம் மூளையின் அடிப்பகுதியில் உள்ளது. இது தவிர நம்மை துாங்க வைப்பதும் துாக்கத்தில் இருந்து எழுப்புவதுமாகிய இரண்டையும் செய்யும் நெற்றிக்கண் எனப்படும் மூன்றாவது கண்ணாகிய பயனியல் சுரப்பி உள்ளது; நம் மூளையின் பின் பகுதியில் தான்.
 

குண்டலினி சக்தி:

இது பூமியில் இருந்து நமது உடலுக்குள் இயற்கையால் உந்தப்படும் ஒரு சக்தி. இது மூலாதாரத்தை வந்தடைந்து விடும். அதிலிருந்து இந்த சக்தியை நமது ஏழாவது ஆதாரமான சகஸ்ராருக்கு கொண்டு செல்ல வேண்டும். இது படிப்படியாக நிகழ வேண்டும். இது நமது தண்டுவடத்தில் உள்ள மற்ற ஆதாரங்கள் வழியாக கடைசி நிலையை அடைய வைப்பது தான் இந்த யோகாவின் முக்கிய குறிக்கோள். பக்தர்கள் வெறுங்காலில் நடப்பது தான் நோக்கம். குண்டலினி சக்தியானது மண்ணில்இருந்து நமது உடலுக்குள் எளிதாக நுழைய வேண்டும் என்பது தான்.

யோகாவின் அம்சங்கள் ஒவ்வொன்றாக பார்ப்போம்:

ஆசனம்

ஆசனம் என்பது நமது சதை, எலும்பு மற்றும் உள்ளுறுப்புகளை சீராக இயங்க வைப்பது. திடமான உடலில் தான், பலமான மனது இருக்க முடியும். உடல், வியாதிகளைச் சுமந்தால் மனது தளரத் தான் செய்யும். நுாற்றுக்கணக்கான ஆசனங்களை ஆராய்ந்து 84 வகையான ஆசனங்களை பிரபலப்படுத்தியுள்ளனர். இதுவும் உலகில், 84 லட்சம் வகையான உயிரினங்கள் உள்ளன என்பதையும் குறிப்பதற்காகவே. தேர் நிலையில் நிற்கும் தடாசனாவில் துவங்கி சவ நிலையில் இருக்கும் சவாசனா வரை ஒவ்வொன்றும் பல பலன்களை தரும்.
 

பிராணாயாமம்:

இது நமது ரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், நமது சிந்தனையை ஒருங்கிணைக்கவும் உதவக் கூடியதாகும். இதை பலரும் பல வகையில் கற்பிக்கின்றனர்.முதல் வகை:வெறுமனே, நமது மூச்சுக் காற்று உள் சென்று வெளி வருவதை ஆழ்ந்து கவனித்துக் கொண்டு மனதை ஒரு நிலைப்படுத்துதல். இரண்டாம் வகை:மெதுவாக வலது மூக்கு வழியாக காற்றை உள்வாங்கி, சிறிது அப்படியே இருந்து பின் வேகமாக இடது மூக்கின் வழியாக வெளியிடுவது. இவ்வாறு வலது, இடது என்று மாறி மாறி செய்ய வேண்டும். மூன்றாம் வகை:மூச்சை வேகவேகமாக உள்வாங்கி வெளிவிட்டு கொண்டிருத்தல். 10  நிமிடங்கள் அடுத்த நிலைக்கு செல்லுதல்.
 

தியானம்:

இதில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஆண் மற்றும் பெண் சக்திகள் இரண்டற கலந்து, சமாதி நிலையை அடைவது. ஒவ்வொரு மனிதனும் தான் என்ற அடையாளத்தை இழந்து பிரபஞ்சத்தோடு கலப்பது. பிரபஞ்சத்தை நோக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி தியானிக்க வேண்டும்.
 

ஓஷோ வழியில் யோகா:


இவர் சற்று வித்தியாசமான ஞானி. இவர் வழியில் ஒருவர் மூச்சுப் பயிற்சி செய்து நான்கு நிலைகள் அடைய வேண்டும். அவை:
முதல் நிலை – பத்து நிமிடம்நேராக நின்று கொண்டு வேகவேகமாக மூச்சு விட வேண்டும். 
முடிவில் நம்முள் ஒருவித சக்தி பரவுவதை உணர வேண்டும்.
இரண்டாம் நிலை – பத்து நிமிடம்இந்த நிலையில் ஆட்டம் பாட்டம் என்று நமது மனதுக்கு பிடித்ததை செய்து உள்ளிருக்கும் கெட்டவற்றை நீக்க வேண்டும்.
மூன்றாம் நிலை – பத்து நிமிடம்இதில் நான் யார், நான் யார் என்ற கேள்வியை உரக்க எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.
நான்காம் நிலை – பத்து நிமிடம்இந்த நிலையில் எல்லாவற்றையும் விட்டு விட்டு அமைதியாக இருக்க வேண்டும். அப்போது நான் என்ற அடையாளம், அகந்தை அழிந்து இந்த பிரபஞ்சத்தோடு கலந்தவர்கள் தான் நாம் என்பது புலப்படும்.
 

செய்யும் செயலே தியானம்:

மேற்சொன்ன வழிகள் எதையும் பின்பற்ற முடியாதவர்கள் தாம், எந்த காரியங்களைச் செய்தாலும் அதில் முழுகவனத்தைச் செலுத்த வேண்டும். அதில் பிரதிபலன்கள் எதிர்பார்க்கக் கூடாது. உதாரணமாக நாம் சாப்பிடும் போது கூட நமது மனமும் உடலும் சாப்பிடுவதில் மட்டும் தான் இருக்க வேண்டும். நிகழ்காலத்தில் நிலை நிறுத்து என்பது தான் அதன் பொருள். கர்ம யோகம் கூறுவதும் அது தான். பக்தி யோகம் போல கர்ம யோகம் சமமான பலன்களை தரக்கூடியது தான்.யோகா செய்தால் சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, அதிக கொழுப்பு, ஆஸ்துமா போன்ற பல வியாதிகள் கட்டுப்படும் என்னும் எண்ணங்களை கடந்து, நமது மனமும் ஆன்மாவும் அடையக் கூடிய உண்மையான மரணத்தை வெல்வது தான் யோகாவின் தனிச் சிறப்பு.

Leave a Reply