ஜாக்டோ ஜியோ ஆசிரியர் கூட்டமைப்புகள் இறுதியாக ஜெயித்தது என்ன? ஆயிரத்து சொச்சம் பேர் பணியிடை நீக்கம், நூற்றுச் சொச்சம்பேர் சிறைக்கு சென்றதே மிச்சம். பொதுமக்களின் ஆதரவு இல்லாத போராட்டங்கள் இப்படிதான் நீர்த்து போகும். மன்னிப்புக்கடிதம் கொடுத்து சம்பளப்பிடித்தத்திற்கு ஒத்துகொண்டு கடைசியில் மண்டியிட வைக்கும். போதாத குறைக்கு நீதிமன்றத்திலும் சாட்டையடி வாங்கிய அவமானமும் மிஞ்சியது.

உங்கள் பிள்ளைகள் பயிலும் தனியாரபள்ளிகளின் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்ததை நீங்கள் ஆதரிப்பீர்களா? சேவை மனப்பான்மையில் வேலைக்குச் சேர்ந்து விட்டு தொழிலாளர்களைப் போல் சாலைமறியல் செய்கிறீர்களே! அசிங்கமாக இல்லையா? என்று ரொம்ப அசிங்கமான கேள்வியும் நீதிபதியிடம் வாங்கியாயிற்று.

போராட்டத்தில் கைதாகி கல்யாண மண்டபத்தில் இருந்து செல்ஃபி போடும் அப்பாவி டீச்சர்களுக்கு இந்தபோராட்டத்தை தூண்டிவிடுவது யாரென்று தெரியாது. ரெண்டுநாள் போராட்டத்தில் உட்கார்ந்தால் பழைய பென்ஷன் கிடைச்சுடும் என்று சங்க நிர்வாகிகள் சொன்னதற்காக ஓடிவந்த கூட்டமிது. காட்டில் ராஜ்யம்செய்வதும் நாட்டில் வேட்டையாடுவதும் மூடர்களின் செயல். அததுக்கு இடமிருக்கு. நேரமிருக்கு.நியாயமான கோரிக்கைகளாக இருந்தாலும் போராட்ட களத்திற்கான சூழல் சரியா? என்று எந்த ஒரு வாத்தியார் மூளையும் யோசிக்கவில்லை. தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் போராட்டத்திற்கு நாள்குறிச்சவன் எவன்டா? என்று எதுவும் யோசித்து இருக்காது. சலுகை வாங்கித்தரேன் என்று சொன்னதும் ஸ்கூலை இழுத்து மூடிவிட்டு சர்க்கரைப் பொங்கலுக்கு அலையும் கோயில் யானை போல் வரிசையில் நின்றது பேராசை. அதான் பெருநஷ்டம்!

ஆசிரியர் வேலைக்கு தேர்வுசெய்துவிட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க சொல்றாங்க. எவன் எவ்ளோ பெத்து வைச்சிருக்கான் என்று கணக்கெடுக்கறதா எங்க வேலை? சொட்டு மருந்து ஊத்தறதா எங்க வேலை? எலெக்ஷன் டியூட்டி பார்த்து ஓட்டு மிஷினுக்கு அரக்கு வைக்கறதா எங்கவேலை? இப்படி நியாயமாக கோவப்பட்டு அதெல்லாம் பண்ண மாட்டோம் என்று சங்கம் மூலம் அழகாக அடம் பிடித்து இருக்கலாம். அதைவிட்டுட்டு பென்ஷன் ஸ்கீம்க்கு மாற்றம் வரும் வரை ஸ்கூல் போகமாட்டோம் என ஸ்கூல் பசங்க மாதிரி அடம்பிடிச்சது அழகா ஆசியர்களுக்கு?

நாட்டில் இரண்டுவேலையில் இருப்பவர்களை பார்த்துதான் மக்கள் கையெடுத்து கும்பிடுவார்கள். ஒண்ணு உயிரை காப்பாற்றும் மருத்துவர்கள். இன்னொன்று அறிவுக் கண்ணை திறந்து விடும் ஆசிரியர்கள். யாருக்கும் கிடைக்காத ராஜ மரியாதையை தெருவில் தவறவிட்டது யார் குற்றம்? நிதானமாக யோசித்தால் உண்மையும், தவறும் புரியும்.

திரு.பா.வெங்கடேசன் அவர்களின் பதிவு

Leave a Reply