ஒரே நாடு , ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழகம் இணையக் கூடாது! மு.ஸ்டாலின்.

* பொது விநியோக திட்டத்திற்காக மத்திய அரசு உணவு தானிய கொள்முதல் செய்கிறது.
கொள்முதல் விலையை விட குறைந்த விலையில் மாநிலங்களுக்கு வழங்குகிறது.
அதற்காக மானிய சுமையை ஏற்றுக்கொள்கிறது. மாநில அரசுகள் கூடுதல் மானியத்தை
வழங்கி மேலும் சலுகை விலையில் விநியோகம் செய்கின்றன. தமிழகத்தில் இலவசமாக
விநியோகம் செய்யப்படும் அரிசிக்கான மானியத்தில் மத்திய அரசின் மானியமும்
அடங்கி இருக்கிறது.

பொது விநியோக திட்டம் என்பதே ஊழலையும் கொள்ளையையும் மேலிருந்து கீழ் வரை
பொதுவாக ஆக்கும் திட்டம் என்ற நிலையை மாற்ற தமிழ்நாட்டின் தலைவரும் அக்கறை காட்டியது இல்லை.

ஆனால் ,இந்த திட்டத்தினால் தமிழக நலன் பாதிக்கப்படும் என்று குரல் எழுப்புவதன் காரணம்
அரசியல் சார்ந்தது மட்டுமே. வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிகமாக இங்கு வந்து தங்க நேர்ந்தால் , சொந்த மாநிலத்தில் பெற்ற பொது விநியோக அட்டையைக் கொண்டு
உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ள இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும். அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றாலும் பயன் அளிக்கும்.

வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் தமிழ்நாட்டிற்கு வந்து , பொது விநியோக திட்டம் மூலம் உணவுப் பொருட்களை பெரும்நிலை ஏற்பட்டால் , தமிழக மக்களின் நலன் பாதிக்கப்படும் என்ற கவலை தான் எதிர்ப்புக்கு காரணம் என்றால் ,அது அர்த்தமற்ற கவலை.
வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் வருகையின் காரணமாக பொது விநியோக திட்டத்தின்
அளவு அதிகரித்தது என்பதை மத்திய அரசுக்கு முறையாக தெரிவித்து கூடுதல் ஒதுக்கீடுகளை
பெற முடியும்! மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கான ஒதுக்கீடுகளில்
குறைத்துக் கொண்டு விடும்!

உயர் நடுத்தர வர்க்கத்தினரோ அல்லது மேல் தட்டு மக்களோ பொது விநியோக திட்ட பொருட்களை வாங்க அக்கறை காட்டப் போவதில்லை. சாதாரண உழைக்கும் மக்கள் தான்
வாங்க விரும்புவார்கள்.

அப்படியும் கூட குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் வந்தால் தான் குடும்ப அட்டையை
மாற்ற வேண்டிய அவசியம் வரும். தமிழ் நாட்டிற்கு வரும் பிற மாநிலத்தவர் பெரும்பாலும்
ஆண்கள் மட்டுமே தான். அதனால் , இந்த திட்டத்தின் பாதிப்பு மிகவும் சொற்ப அளவே
இருக்கும். அதேசமயம் தமிழ் நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஆண்கள் மட்டும் செல்வதை விட குடும்பமாக செல்வதே அதிகம். அந்த வகையில் வேலை வாய்ப்பு தேடி
அண்டை மாநிலங்களுக்கு செல்லும்  தமிழக உழைக்கும் மக்களுக்கு இது பயனுள்ள திட்டம்.

வட இந்தியா மக்கள் வட இந்திய மாநிலங்களுக்கும் குஜராத் – மஹாராஷ்டிரா போன்ற
மாநிலங்களுக்கும் ,மேற்கு வங்காளம் அஸ்ஸாம் போன்ற கிழக்கு மாநிலங்களுக்கும் தான்
குடும்பமாக செல்லும் வாய்ப்பு அதிகம்!

தமிழகத்திற்கு வருபவர்கள் இந்த பொது விநியோக திட்டத்தின் பயன்களை எதிர்பார்த்து
வரப் போவதில்லை.வேலை வாய்ப்பு தான் அவர்களின் இலக்கு. அப்படி பார்த்தாலும் கூட
அவர்களின் உழைப்பை தமிழக பொருளாதார வளர்ச்சிக்கான மனித வளம் என்று தான்
பார்க்க வேண்டும்.அந்த மனித வளத்திற்கு அளிக்கப்படும் அடிப்படை வசதி இது என்று தான்
கருத வேண்டும்.

ஒரு முதலீட்டாளர் வரும்போது மாநில அரசு அளிக்கும் சலுகைகளில் இந்த வசதி ஒப்பிட்டு பார்க்க முடியாத சிறிய துளி! தமிழ் நாட்டில் வட இந்திய உழைக்கும் மக்களுக்கு எதனால் வரவேற்பு அதிக அளவில் இருக்கிறது? தமிழக அரசியல் தலைவர்கள் இதை முதலில் யோசித்துபார்க்க வேண்டும்!
அதோடு , பொது விநியோக திட்டம் தமிழ்நாட்டில் ஊழல் மலிந்த ஒன்றாக ஏன் தொடர்கிறது?
இந்த நிலையை மாற்ற என்ன வழி என்று யோசிக்க வேண்டும்.

எதிர்மறை அரசியலின் ஆயுட்காலம் மிகவும் குறைவு என்பதை உணர்வது திமுகவின்
எதிர்காலத்திற்கு நல்லது!

Comments are closed.