தெலங்கானாவில் உள்ள பெரும் பான்மையான சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளில் வெற்றிபெறவும், ஹைதராபாத் மக்களவைத் தொகுதி எம்.பி. அசாதுதீன் ஒவைசியை தோற்கடிக்கவும் பாஜக உத்தியை வகுத்துவருகிறது.


இதுதொடர்பாக கட்சியின் தெலங்கானா மாநில செய்தித்தொடர்பாளர் கிருஷ்ணசாகர் ராவ், ஹைதராபாதில் கூறியதாவது: அடுத்த மக்களவைத்தேர்தல், வரும் 2019-இல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக 350 இடங்களைக் கைப்பற்றவேண்டும் என்ற இலக்கை கட்சியின் தேசியத்தலைவர் அமித் ஷா நிர்ணயித்துள்ளார்.

அதை எட்டுவதற்கான செயல் திட்டத்துக்கு 'மிஷன் 2019' என்று பெயரிடப் பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 80-ஐக் கைப்பற்றவும், மாநிலத்தில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளில் 15-ஐக் கைப்பற்றவும் பாஜக திட்டமிட்டுள்ளது.


மேலும், ஹைதராபாத்தொகுதி எம்.பி.யான அசாதுதீன் ஒவைஸியைத் தோற்கடிக்கவும் இலக்கு நிர்ணயித் துள்ளோம். அகில இந்திய முஸ்லிம் மஜ்லிகஸ் கட்சித்தலைவரான அவர் மூன்று முறை இத்தொகுதியில் வென்றுள்ளார். அவருக்கு எதிரான மக்களின் அதிருப்தியை எங்களுக்குச்சாதகமாகத் திருப்பும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.


மஜ்லிஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் பழைய ஹைதராபாத்பகுதி வாக்காளர்கள் இதுவரை அக்கட்சியிடம் பிணைக் கைதியாக சிக்கியிருந்தனர். அவர்களுக்குத் தெளிவான மாற்றுவாய்ப்பு ஒன்று அளிக்கப்பட்டால், அப்பகுதியில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்காளர்களும் மாற்றுசக்திக்கே (பாஜக) வாக்களிப்பார்கள் என்பது உறுதி.


இந்த மாற்றானது உத்தரப் பிரதேசத்தில் நாங்கள் சாதித்தமாற்றாகும். அங்கு முஸ்லிம் மக்கள்தொகை கணிசமாக உள்ள தேவ்பந்த் உள்ளிட்ட தொகுதிகளில் ஒரேவொரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட நிறுத்தாமல் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்றது. அதேபோல் ஹைதராபாதிலும் நடக்க உள்ளது. ஒவைஸியைத் தோற்கடிப்பதற்கு, நாட்டின் எந்தப்பகுதியையும் சேர்ந்த பாஜகவின் பெரியதலைவர் ஒருவரை நிறுத்தும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.


தெலங்கானாவில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தனி மாநிலத்துக்கான இயக்கம் உச்ச கட்டத்தில் இருந்தபோதிலும் கூட தெலங்கானா ராஷ்டிரசமிதி கட்சியால் 34 சதவீத வாக்குகளையும், 62 இடங்களையும் மட்டுமே பெறமுடிந்தது. இது மிகவும் குறந்தபட்ச வெற்றிதான். 119 இடங்களைக் கொண்ட பேரவையில் பெரும்பான்மை பலத்துக்குத் தேவையான 60 இடங்களை விடக்கூடுதலாக அக்கட்சி 2 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.


இந்தச் சூழலில், தெலங்கானாவில் ஆளுங்கட்சிக்கு எதிரான அலை மக்களிடையே வீசுவதாலும், கள அளவில் அக்கட்சிக்கு எதிர்ப்பு வலுத்துவருவதாலும் இப்போதைய ஆட்சியாளர்கள் அடுத்த தேர்தலில்தோற்பது உறுதி. எனவே, பாஜக 80 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிப்பதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

Leave a Reply