குடியுரிமை திருத்த சட்டத்தால், யாருடைய குடியுரிமையும் பறிக்கப் படாது; இங்கு வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் இந்தியரே.

பழைய சிந்தனையையும், அணுகு முறையையும் பின்பற்றி இருந்தால், 370வது பிரிவு நீக்கப்பட்டிருக்காது. ‘முத்தலாக்’ முறையால் பெண்கள் பாதிக்கப் படுவது தொடர்ந்திருக்கும். ராம ஜென்ம பூமி பிரச்னை தீர்ந்திருக்காது.

கர்தார்பூர் சாலைதிட்டம் பயன்பாட்டுக்கு வந்திருக்காது. இந்தியா- – வங்கதேசம் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்காது. பல்வேறு சவால்களை துணிச்சலுடன் சந்திக்க முடிவு செய்த தாலேயே, இவை அனைத்துக்கும் தீர்வு கிடைத்துள்ளது. விரைவாகவும், தீர்க்கமாகவும், ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வுகாண வேண்டுமென்ற லட்சியம் காரணமாகவே, கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு பணிகள் நிறைவேறியுள்ளதை, மக்கள் கண்கூடாக பார்க்கின்றனர்.

அதனால்தான், மீண்டும் வாய்ப்பளித்துள்ளனர். இதனால், இன்னும்கூட வேகமாக பணியாற்றுவோம். வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியை நோக்கி செல்கின்றன. 37 கோடி பேருக்கு வங்கிக்கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயம், பயிர்காப்பீடு, நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல விஷயங்கள் முன்னெடுக்கபட்டுள்ளன.

வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன; உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளன. விவசாயத்துக்கான பட்ஜெட் ஐந்துமடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. வேறு எதில் வேண்டு மானாலும் அரசியல் இருக்கலாம். ஆனால், விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை வைத்துமட்டும் அரசியல் செய்யவேண்டாம். இன்னும் ஆறு மாதத்தில், ‘மோடியை தடி கொண்டு அடிப்போம்’ என, எதிர்க்கட்சி எம்.பி., கூறுகிறார். இதற்காகவே, சூரிய நமஸ்காரத்தை நிறைய செய்யப்போகிறேன். இதன் மூலம் இழிச் சொற்களை மேலும் தாங்கும் அளவுக்கு என் முதுகு பலம் பெறும்.

‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ என, காங்கிரஸ் திரும்ப திரும்ப கூறுவது முற்றிலும் பொருத்தமே. அதிக தடவை, 356வது பிரிவை பயன்படுத்தியும், நெருக்கடிநிலையை அமல்படுத்தியும், அரசியல் சட்டத்தை திருத்தியும் செய்தபாவத்திற்கு, காங்கிரஸ் அவ்வாறு அடிக்கடி கூறி, பிராயசித்தம் தேடுவது நல்லதே.

பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கும் மேலாக, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், ‘தேசிய ஆலோசனை கவுன்சில்’ என்றபெயரில் கூடுதல் அதிகார மையமாக வலம் வந்தவர்கள் எல்லாம், ஜனநாயகம் பற்றிபேசுவது கேலிக்கூத்தானது. அரசியல் சட்டத்திற்காக குரல்கொடுப்பவர்கள், அதே சட்டம், ஜம்மு – காஷ்மீரில் பல ஆண்டுகளாக அமலில் இல்லாமல் இருந்தபோது, குரல் கொடுக்க வில்லை. அம்மாநில முன்னாள் முதல்வர்களின் பேச்சுகள் ஏற்புடையதல்ல. நாட்டிற்கே மகுடம்போன்றது காஷ்மீர்.

முஸ்லிம்களை ஓட்டு வங்கியாகவே பார்க்கிறது காங்கிரஸ். குடிமக்களை மதத்தின் அடிப்படையில் பார்க்கின்றனர். நாங்களோ, ஒவ்வொருவரையும் இந்தியர்களாகவே சம அந்தஸ்துடன் பார்க்கிறோம். இந்திய முஸ்லிம்களிடையே அச்சத்தை உருவாக்க நினைக்கிறது, பாகிஸ்தான். இங்குள்ள ஒவ்வொரு முஸ்லிமும் இந்தியர்தான்; எக்காரணத்தாலும், அவர்களை விட்டுத் தர மாட்டோம். குடியுரிமை சட்டத்தால் எந்தவொரு இந்திய குடிமகனுக்கும் பாதிப்பு வராது.

‘எங்களைப் பார்த்து நாட்டை பிளவுபடுத்து கிறீர்கள்’ என்கிறது காங்கிரஸ். நாடு சுதந்திரம் அடைந்த போது, ஒரு குறிப்பிட்ட நபர், பிரதமர் ஆக வேண்டுமென விரும்பி, அதற்கேற்ப திட்டங்கள் தீட்டப்பட்டன. அத்திட்டத்தின் ஒருபகுதியாகவே, இந்தியா துண்டாடப்பட்டது. இதை, நாட்டு மக்கள் அனைவரும் நன்றாகவே அறிவர்.

மதச்சார்பற்ற நேரு, லியாகத் அலிகானுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், ‘அனைத்து குடிமக்கள்’ என்ற வார்த்தையை பயன்படுத்து வதற்கு மாறாக, ‘சிறுபான்மையினர்’ என்றே குறிப்பிடுகிறார். அப்படியெனில், நேரு மதவாதியா… அவர் ஹிந்துராஷ்ட்ரா உருவாக்க விரும்பினாரா என்பதை, காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும்.

‘நம் நாட்டு இளைஞர்கள், இன்னும் ஆறு மாதத்தில், தங்களுக்கு வேலைகேட்டு, மோடியை தடிகொண்டு அடிப்பர்’ என, டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியிருந்தார். பிரதமர்மோடி நேற்று பேசியபோது, இதை மறைமுகமாக குறிப்பிட்டார். சில நிமிடங்கள் கழித்து, பிரதமரின் பேச்சுக்கு பதிலடியாக ராகுல் எழுந்து ஏதோபேசினார். பெரும் அமளியால் ராகுல் என்ன பேசினார் என்பது யாருக்கும் கேட்கவில்லை.

தன்பேச்சை தொடர்ந்த மோடி, ”அப்பாடா… நான் பேசத்துவங்கி, 30 – 40 நிமிடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், தற்போதுதான் மின்சாரம் அங்கு பாய்ந்துள்ளது. பரவாயில்லை, என்ன செய்வது… சில டியூப்லைட்டுகள் இப்படித்தான் தாமதமாக ஒளிரும்,” என, கிண்டலாக பேசவும், சபையே அதிர்ந்தது.

ஜம்மு – காஷ்மீரில், 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அங்குள்ள மக்களுக்கு பல்வேறு பயன்கள் கிடைத்துள்ளன. யூனியன் மேம்பாட்டு கவுன்சிலுக்கான தேர்தல் நடந்துள்ளது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைசட்டம் அமலுக்கு வந்துள்ளது. இட ஒதுக்கீட்டின் பலன்கள் கிடைத்துள்ளன. லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் விஷயத்தில், அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக, குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் தவறான தகவல்களை கூறுகின்றனர். பார்லிமென்டில் விரிவானவிவாதம் நடத்திதான் முடிவு எடுக்கப்பட்டது. ‘ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நாள், கறுப்புதினம்’ என, வைகோ கூறுகிறார். ஆனால், பயங்கரவாதத்தையும், பழமைவாதத்தையும் ஊக்குவிப்பவர்களுக்கு தான், இது கறுப்பு நாள்; பிரிவினைவாதிக்குதான் கறுப்பு நாள்.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, நாட்டுமக்களை, காங்கிரசும், மற்ற எதிர்க்கட்சியினரும் தவறாக வழிநடத்தி வருகின்றனர். கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன், குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் பழமைவாதிகளுக்கு தொடர் புள்ளதாக எச்சரித்துள்ளார். ஆனால், இடதுசாரி கட்சிகளின் மற்ற தலைவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டில்லியில் நடக்கும் போராட்டங்களில் பங்கேற்கின்றனர்.

சர்வதேச அளவில், பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவினாலும், இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அம்சங்கள் மிகவும் வலுவாக உள்ளன. நான் குஜராத் முதல்வராக இருந்த போது, ஜிஎஸ்டி., விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு உள்ள பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினேன். அப்போது, மத்தியில் காங்கிரஸ் அரசு பதவிவகித்தது. நான் பிரதமரானதும், அந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாணப்பட்டது.

பா.ஜ., ஆட்சி அமைந்ததும், ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்தாமல் இருப்பதற்காக, காங்கிரஸ் முட்டுக் கட்டை போட்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் பேசியது 

Comments are closed.