வங்கிகளில் கடன்பெற்று மோசடியில் ஈடுபடுவோரிடம் இருந்து ஒருபைசா பாக்கி இல்லாமல் திரும்ப வசூலிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.


அசாம் சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 4 மற்றும் 11-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

2-வது நாளான நேற்று அசாமின் ரங்கபாரா பகுதியில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, வங்கிகளில் கடன்பெற்று மோசடியில் ஈடுபட்ட மல்லையா விவகாரம் தொடர்பாக காங்கிரசை கடுமையாக சாடினார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-


காங்கிரஸ் கட்சி தனது ஆட்சிக் காலத்தில் பணக்காரர்களுக்காக வங்கிகளை திறந்துள்ளது. இந்தவங்கிகள் மூலமாக காங்கிரஸ் கட்சியின் அரசுகள், செல்வந்தர்களின் கருவூலங்களை நிரப்பியுள்ளன.

வங்கிகளில் இருந்து கோடிக் கணக்கான நிதியை, இந்த செல்வந்தர்கள் எப்படி கொள்ளையடித் திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இந்தபணம் வங்கிகளுக்கு சொந்தமானது அல்ல. மாறாக இந்தநாட்டின் ஏழை மக்களுடையது. அந்த வகையில் அவர்கள் நாட்டையே கொள்ளையடித்து இருக்கிறார்கள்.

இத்தகைய கொள்ளையர்கள் தப்பிவிடாமல் இருக்க அனைத்து வழிகளையும் எனது அரசு இறுக்கியுள்ளது. இதனால் சிறைசெல்ல பயந்துதான் அவர்கள் நாட்டை  விட்டு தப்பி ஓடுகிறார்கள். ஆனால் வங்கிகடன் மோசடியில் ஈடுபடுவோர் யாரும் தப்பமுடியாது. அவர்களிடம் இருந்து ஒருபைசா பாக்கி இல்லாமல் திரும்ப வசூலிக்கப்படும் என்பதை உறுதியாக கூறுகிறேன்.

இந்நாடு இடைத் தரகர்களால் இயக்கப்படுகிறது. மோடி ஆட்சிக்குவந்ததில் இருந்து இத்தகைய இடைத் தரகர்கள் அனைவரும், தங்கள் கடைகளை அடைத்து வருகிறார்கள் என என் மீது சிலர் (காங்கிரஸ்) குற்றம் சாட்டு கிறார்கள். ஆனால் எனக்கு கவலை இல்லை.

இடைத்தரகர்களுக்கு நல்லகாலம் வராததால், என்மீது அவர்கள் கோபப்படுவது இயற்கைதான். நீங்கள், ஏழைகளை சுரண்டுவதிலேயே 60 ஆண்டுகளை கழித்தீர்கள். அது இனி மேலும் நடக்காது. எனவே என் மீது நீங்கள் எரிச் சலடைவது இயற்கையே. நாட்டின் வளர்ச்சிக்காகவே நான் உறுதிபூண்டிருக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply