ஒருவருக்கொருவர் கண்களை நேருக்கு நேர் பார்த்துக்கொள்ள முடியாதவர்கள், பேச முடியாதவர்கள் எல்லாம் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்க திட்டமிடுவதாக எதிர்க் கட்சியினரை பிரதமர் நரேந்திரமோடி சாடியுள்ளார். 

டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. நிறைவுநாளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, யாராலும் வசப்படுத்த முடியாத இந்தியாவின் வெற்றி மற்றும் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில் அஜய் பாரத், அடல் பிஜேபி என்ற ஸ்லோகனை மக்களவை தேர்தலுக்காக முன் மொழிந்தார்.

பாஜகவுக்கு எதிராக பெரிய கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பது குறித்து விமர்சித்த பிரதமர், கண்களை நேருக்குநேர் பார்க்க முடியாதவர்கள், ஒருவருக்கொருவர் பேச முடியாதவர்கள் எல்லாம் கூட்டணி அமைக்கும் நிலைக்கும் தள்ளப் பட்டுள்ளதாக சாடினார். இதுவே பாஜகவின் வெற்றி  என்றும் மக்கள் தங்களது திட்டங்கள், கட்சி, தலைமையை ஏற்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.

பாஜகவின் 48 மாத ஆட்சி, காங்கிரஸ் கட்சியின் 48 ஆண்டுகள் ஆட்சியைவிட சிறப்பானது என்று அவர் குறிப்பிட்டார். பாஜக.,வின் கொள்கைகள் என்றும் மாறாது ஆனால், யுக்திகள் நேரத்தற்கு தகுந்தவாறு மாறும் என்றும் மோடி தெரிவித்தார்.


கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார். அதன்பிறகு 50 ஆண்டுகள் தங்களை யாரும் ஆட்சியில் இருந்து அகற்றமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply