ஹரியானாவில் அரசு அமைப்பதற்கு, சர்ச்சைக் குரிய எம்.எல்.ஏ கோபால் கந்தாவின் ஆதரவை பாஜக கோராது என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெளிவுபடுத்தி யுள்ளார்.

90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா சட்ட சபைக்கு, குறைந்த பட்ச பெரும்பான்மையை நிரூபிக்க, 46 எம்எல்ஏக்கள் தேவை.

ஹரியானாவில் நடந்த சட்ட சபை தேர்தலில் பாஜகவால் மொத்தமுள்ள 40 தொகுதிகளில்தான் வெல்ல முடிந்தது. காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றிபெற்றது. புதிதாக உருவான, ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வென்றது. அதேபோல் சுயேட்சைகள் 7 இடங்களில் வென்றனர். எனவே, ஹரியானாவில் ஆட்சி அமைக்க இழுபறிநிலை நீடித்தது.

சுயேச்சைகள் ஆதரவோடு ஆட்சியமைக்க பாஜக முதலில் முடிவெடுத்தது. ஆனால், சுயேச்சைகளை தனது கட்டுப் பாட்டில் வைத்துள்ள ஹரியானா லோகித் என்ற கட்சியின் தலைவரும், இந்த தேர்தலில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப் பட்டவருமான, கோபால் கந்தா, தனக்கு அமைச்சர் பதவிதந்தால், சுயேச்சைகளை பாஜகவுக்கு ஆதரவு அளிக்கச் செய்வதாக கூறினார்.

ஆனால் கோபால் கந்தா, ஏற்கனவே விமான பணிப் பெண் மற்றும், அவர் தாயார் மரண விவகாரத்தில் தொடர்புள்ளவர் என்று குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்பதால், அவரது ஆதரவை ஏற்ககூடாது என்று பாஜகவில் எதிர்ப்புகுரல் எழுந்தது. மூத்த தலைவர் உமாபாரதி இதை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், “கந்தாவின் ஆதரவை பாஜக பெறப்போவதில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று ரவிசங்கர் பிரசாத் இன்று சண்டிகரில் செய்தியாளர்களிடம் கூறினார்.

Comments are closed.