நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதிமுக உட்பட எந்தக்கட்சியுடனும் கூட்டணி குறித்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று அவர் அளித்தபேட்டி:விழுப்புரத்தில் இருந்து நாகை வழியாகவும், தூத்துக்குடியிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் சுமார் ரூ.7,500 கோடி செலவில் கிழக்குகடற்கரைச் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இத்திட்டத்துக்காக இன்னும் ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட உள்ளது. சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரைச்சாலை அமைக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். மத்திய அரசின் திட்டங்களில் அதிக பலன்பெறும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் தான், தமிழ்நாட்டில் பாஜகவால் கால் ஊன்ற முடியும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளது அவரதுகருத்து. ஆனால், கூட்டணி குறித்து உரியநேரத்தில் பாஜக முடிவெடுக்கும். அதிமுகவில் உள்ள தம்பிதுரை உள்ளிட்ட சிலர் பாஜகவை விமர்சிக்கின்றனர்.

கனவு காணவேண்டாம் பாஜகவுடன் யார் வேண்டுமானாலும் கூட்டணி சேரலாம் என கனவுகாண வேண்டாம். எந்தக் கட்சியுடன் சேர வேண்டும் என முடிவெடுக்க வேண்டியது பாஜக மட்டுமே. கூட்டணி தொடர்பாக அதிகாரப் பூர்வமாக அதிமுக உட்பட எந்தக் கட்சியுடனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாஜக பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை, அப்படி பேச வேண்டிய தேவையும் பாஜகவுக்கு இல்லை.

சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரையிலான தூரத்தை சாலை வழியாகக் கடந்துசெல்வது சவாலானது. இங்கு சாலை விரிவாக்கம் செய்ய நிலங்களை கையகப்படுத்துவதில் சிக்கல் இருப்பதால், இந்த வழித்தடத்தில் மேம்பாலம் போன்ற ‘உயர்மட்ட சாலை’ அமைப்பதே சிறந்தது. செங்கல்பட்டை அடுத்துள்ள பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்தி திருச்சி மற்றும் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் சாலையை விரிவாக்கம்செய்யலாம். ஒரு அடி விவசாய நிலத்தை எடுப்பதற்கு கூட பாஜக அரசு விரும்பவில்லை. மாறாக, வேறு வழியே இல்லை எனில் நிலங்களை கையகப்படுத்தியே ஆக வேண்டும் என்றார்.

Leave a Reply