பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.

காஷ்மீரில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடிகொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, இந்திய ராணுவ நிலைகளை குண்டுவீசி தாக்க பாகிஸ்தான் போர்விமானங்கள் முயற்சி மேற்கொண்டன. அந்த விமானங்களை இந்திய விமானப்படையின் சுகோய், மிக் ரக போர்விமானங்கள் விரட்டியடித்தன. இதில் ஏவுகணையை சுமந்து வந்த பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை, மிக் 21 விமானத்தில் இருந்து சுட்டுவீழ்த்தினார் இந்திய விமானப்படை விமானியான விங் கமாண்டர் அபிநந்தன்.

இதையடுத்து பாகிஸ்தான் விமானம் தாக்கியதில் அபிநந்தனின் விமானமும் சேதம் அடைந்ததால் பாராசூட் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்பகுதியில் தரையிறங்கினார். அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்தனர்.

அவரை விடுவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் அழுத்தமும், உலக நாடுகளின் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடும், பாகிஸ்தானை நெருக்கடிக்கு உள்ளாக்கியது, அதனை தொடர்ந்து அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார்.

இதனையடுத்து, இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கிய பாகிஸ்தான் அரசு, ராவல்பிண்டியில் வைக்கப்பட்டிருந்த அபி நந்தனை, ஜெனீவா ஒப்பந்தப்படி சர்வதேச செஞ்சிலுவை சங்க அதிகாரிகளிடம் காட்டியது. மாலை 4 மணியளவில் அபிநந்தனை வாகாவில் ஒப்படைப்பதாகக்கூறி இருந்த பாகிஸ்தான், பின்னர் நேரத்தை இருமுறை மாற்றியது. இரவு ஒன்பது மணிக்கு மேல் வாகாவுக்கு அழைத்து வரப்பட்ட அபிநந்தனுடன் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகளும், செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச பிரதிநிதியும் வந்தனர்.

எல்லையில் அபிநந்தனை வரவேற்க காத்திருந்த இந்தியதரப்பிடம் அதற்கான ஆவணங்களை பாகிஸ்தான் தரப்பு வழங்கியது. அந்த ஆவணங்களை சரிபார்த்த இந்திய அதிகாரிகள் அதில் கையெழுத்திட்டு கொடுத்தனர். இதனை பெற்றுக்கொண்ட பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அபிநந்தனை இந்திய எல்லையை நோக்கி அனுப்பி வைத்தனர். பாகிஸ்தானில் பிடிபட்ட போது விமானப்படை உடையில் இருந்த அவர், தாயகத்திற்கு திரும்பியபோது கோட் சூட் அணிந்திருந்தார். பாகிஸ்தானின் பிடியில் இரண்டு நாட்கள் இருந்தபோதிலும், கம்பீரம் குறையாத முகத்துடன் இந்திய மண்ணில் மீண்டும் கால்வைத்தார்.

அவரை இந்திய விமானப்படை துணைதளபதிகள் பிரபாகரன், ஆர்.ஜி.கே.கபூர் ஆகியோர் அரவணைத்து தாய்மண்ணுக்கு அழைத்து வந்தனர். அப்போது பேட்டியளித்த ஆர்.ஜி.கே.கபூர், ‘விமானத்தில் இருந்து கீழே விழுந்தபோது, அபிநந்தனுக்கு காயம் ஏற்பட்டிருக்கும் என்பதால், அவர் விரிவான மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட விருக்கிறார். அபிநந்தன் திரும்பி வந்துள்ளதால் இந்திய விமானப்படை மகிழ்ச்சி கொள்கிறது’ என்று பேசியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்ட காவல் துணை ஆணையர் ஷிவ் துலார்சிங், தாயகம் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என அபிநந்தன் கூறினார். அவர் சிரிப்பைத்தவிர வேறு எதையும் சொல்லவில்லை என்றார்.

பிறகு வாகா எல்லையில் இருந்து கார்மூலமாக அபிநந்தன் வாகன அணிவகுப்புடன் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு வழி நெடுகிலும் பலமணி நேரமாக காத்திருந்த மக்கள் வரவேற்பு அளித்தனர். அமிர்தசரஸிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அபிநந்தன், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டபிறகு குடும்பத்தினர் சந்திக்க அனுமதி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அபிநந்தன் தொடர்புடைய 11 வீடியோக்களை யு டியூப் தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவுறு​த்தி இருந்தது. அபிநந்தன் பாகிஸ்தான் படையினரால் பிடிபட்டது தொடர்பான வீடியோக்கள் யு டியூப் தளத்தில் இருந்து, நீக்குமாறு கூறியது. இதையடுத்து, அந்த வீடியோக்களை ‘யு டியூப்’ இணையதளத்தை நிர்வகிக்கும் கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது

Leave a Reply