‘காஃபி டே’ நிறுவன உரிமையாளர் சித்தார்த்தா, திடீரென மாயமாகியுள்ளார். காஃபி டே உலகப் புகழ்பெற்ற நிறுவனம். அந்த நிறுவனம்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய தனிநபர் காஃபி தோட்டத்தையும் கொண்டுள்ளது. இவ்வளவு பெரிய நிறுவனத்துக்குச் சொந்தக்காரரான 58 வயதுடைய விஜி சித்தார்த்தா, நேற்றுமாலை காணாமல் போயுள்ளார். இவர், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன்.

கர்நாடகாவின் சிக்மங்களூருவில் உள்ள தன் காஃபி தோட்டத்துக்கு வேலைவிஷயமாக நேற்று சென்றுள்ளார் சித்தார்த்தா. அங்கு வேலைகள் அனைத்தும் முடித்துவிட்டுத் திரும்பும்போது, தன் கார்டிரைவரிடம் கேரளா செல்லவேண்டும் எனக் கூறியுள்ளார். டிரைவரும் சிக்மங்களூரு – மங்களூரு நெடுஞ்சாலை வழியாக கேரளா வந்துள்ளார்.

கார், மங்களூரு நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென காரை நிறுத்தும்படி தன் டிரைவரிடம் கூறியுள்ளார் சித்தார்த்தா. அவரின் சொல்படி டிரைவரும் காரை நிறுத்தியுள்ளார். காரில் இருந்து இறங்கிய சித்தார்த்தா டிரைவரிடம், “உள்ளேயே இரு. சிறிதுநேரத்தில் வந்துவிடுகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார். அரைமணி நேரம் ஆகியும் சித்தார்த்தா வராததால் குழப்பமடைந்த கார் டிரைவர், சித்தார்த்தாவுக்கு போன் செய்துள்ளார். அப்போது, அவரின் போன் ஸ்விட்ச் ஆஃபில் இருந்துள்ளது. பதறிப்போன டிரைவர், உடனடியாக சித்தார்த்தாவின் வீட்டுக்கு போன்செய்து தகவல் தெரிவித்துள்ளார்.

ஜெப்பினா மோஹரு (Jeppina Mogaru) என்ற இடத்தில்தான் சித்தார்த்தா காணாமல் போயுள்ளார். அந்தப் பகுதிக்கு அருகில்தான் நேத்ராவதி ஆறு ஓடுகிறது. இந்தத் தகவல் மங்களூரு காவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், சித்தார்த்தா பற்றி அருகில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் முடிவில், யாரோ ஒருவர் உல்லால் பாலத்தில் இருந்து நதியில் குதித்ததைத் தாங்கள் பார்த்ததாக சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். நதியில் குதித்தது சித்தார்த்தாவாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ள காவல்துறையினர், நேத்ராவதி நதியில் சித்தார்த்தாவின் உடல் உள்ளதா என்ற தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சித்தார்த்தா காணாமல் போய்விட்டார் என்ற தகவல் காட்டுத் தீ போல் பரவ, தற்போது எஸ்.எம். கிருஷ்ணாவின் வீட்டின் முன் நூற்றுக் கணக்கானவர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் ஆகியோர், ஆறுதல் கூறுவதற்காக எஸ்.எம் கிருஷ்ணாவின் வீட்டுக்கு விரைந்துள்ளனர். மறுபுறம் நேத்ராவதி ஆற்றில் சித்தார்த்தாவைத் தேடும்பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் காஃபிடே நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்ததாகக் கூறப்படுகிறது. தொழில் ரீதியில் ஏற்பட்ட பிரச்னையில் சித்தார்த்தா காணாமல் போயிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

கடற்படையினர், மீனவர்கள், மீட்புப்படையினர் என 200 பேர் சித்தார்த்தாவை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சமீபத்தில் சித்தார்த்தா ’ லாபகரமான தொழிலை உருவாக்குவதில் தோல்வியடைந்து விட்டேன்’ என தன் காஃபி டே ஊழியர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், “37 வருடங்களுக்குப் பிறகு 30,000 நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி, சிறந்தமுறையில் இருந்தபோதிலும் சரியான லாபகரமான வணிகத்தை உருவாக்கத் தவறிவிட்டேன்.

நான், என்னுடைய அனைத்தையும் கொடுத்து விடுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒரு தனியார் நிறுவன பார்ட்னர், நான்விற்ற பங்குகளை மீண்டும் வாங்கும்படி எனக்கு அழுத்தம் கொடுத்துவருகிறார். நான் நீண்ட நாள்களாக அதனுடன் போராடி வருகிறேன். சிலநாள்களுக்கு முன்பு, என் நண்பரிடமிருந்து அதிக அளவிலான பணம் கடனாகப் பெற்றுள்ளேன். நான் கடன்வாங்கிய அனைவரும் தற்போது எனக்கு அழுத்தம் தரத் தொடங்கிவிட்டனர்.

நான் ஊழியர்கள் அனைவருக்கும் ஒருவேண்டுகோள் விடுக்கிறேன். அனைவரும் வலிமையாக இருந்து, வேறு நிறுவனத்துடன் இணைந்து காஃபிடேயை நல்லபடியாக நடத்துங்கள். நடந்த அனைத்து தவறுகளுக்கும் நான்மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அனைத்து பணப் பரிவர்த்தனைகளுக்கும் நானே பொறுப்பு. என் குழு, ஆடிட்டர், மூத்த நிர்வாகிகள் போன்ற எவருக்கும் என் பணப் பரிவர்த்தனை பற்றி எதுவும் தெரியாது. நான் யாரையும் ஏமாற்ற நினைக்கவில்லை. ஒருதொழிலதிபராக நான் தோல்வியடைந்துவிட்டேன். ஒரு நாள் அனைவரும் என் நிலையைப் புரிந்து கொண்டு எனக்கு மன்னிப்பு வழங்குவீர்கள். இத்துடன் என் சொத்து விவரங்களையும் இணைத்துள்ளேன். இது என் கடனை மீண்டும் செலுத்த உதவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காஃபி டே நிறுவனத்துக்கு 7,000 கோடி ரூபாய் வரை கடன் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காவலர்கள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இந்த கடிதத்தின் உண்மைதன்மை உறுதிபடுத்தப்படவில்லை

Comments are closed.