சத்தீஸ்கர் 2000-ல் புதிய மாநிலமாக உருவாக்கபட்டது. அதன் பிறகு நடந்த 2004, 2009, 2014 மூன்று மக்களவை தேர்தல்களிலும் பாஜகவுக்குப் பெரும் ஆதரவு தந்த மாநிலம் இது. மும்முறை முதல்வராக அங்கு ஆட்சியில் இருந்த ரமண்சிங், பாஜகவுக்குக் கடந்த மூன்று தேர்தல்களிலுமே மாநிலத்தின் 11 மக்களவைத் தொகுதிகளில் 10 இடங்களில் கட்சிவெல்ல முக்கியமான காரணமாக இருந்தார். சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸிடம் ஆட்சியை இழந்துவிட்ட நிலையில், இப்போது மக்களவைத் தேர்தலில் கட்சிவென்ற இடங்களை அப்படியே தக்கவைக்கக் கடுமையாகப் போராடி வருகிறார். தேர்தல் களத்தில் உற்சாகமான பணிகளில் இருந்தவரிடம் நேர்கண்ட பேட்டியிலிருந்து…

சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு மூன்றே மாதங்களில் அடுத்த தேர்தலை எதிர்கொள்கிறீர்கள்; மீண்டும் வெற்றிப்பாதையில் பாஜக செல்ல இந்த அவகாசம் போதுமா?

மிகவும் குறுகிய காலம்தான்; ஆனால், பூபேஷ் பகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசுசெய்துள்ள சில தவறுகள் எங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன். தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்ததற்கு நேர்எதிரான திசையில் காங்கிரஸ் அரசு செல்கிறது. மதுவிலக்கு அமல்படுத்தபடும் என்றார்கள். இப்போது மதுவிலை உயர்த்தப்பட்டு, மேலும் பலகடைகளைத் திறந்துள்ளனர். வேலை கிடைக்காத 23 லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றார்கள். இன்னும் 23 பேருக்குக்கூட ஒரு நயாபைசா சென்றடையவில்லை. விவசாயக்கடன் தள்ளுபடியும் சில விவசாயிகளுக்குத்தான் கிடைத்திருக்கிறது. டெண்டு மரத்திலிருந்து பீடிசுற்ற இலைகளைச் சேகரிக்கும் தொழிலாளர்களுக்கு காலணி வழங்க, பாஜக அரசு கொண்டுவந்த ‘சரண்பாதுகா திட்டம்’கூடக் கைவிடப்பட்டு விட்டது. அரசின் வருவாய்க்கும் செலவுக்குமான பற்றாக் குறை 6% ஆக உயர்ந்திருக்கிறது. மாநிலக் கருவூலம் காலியாக இருக்கிறது. மாதஊதியம் தரக்கூடப் பணமில்லை.

உங்கள் மகன் உள்பட, கடந்தமுறை வென்ற எல்லா மக்களவை உறுப்பினர்களையும் பாஜக மாற்றிவிட்டது; இதன்மூலம் கட்சி உணர்த்துவது என்ன?

2003 முதல் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தோம். கூடவே, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வென்றோம். இதனால், பலர் பழைய முகங்களாகிவிட்டனர். தொடர்ந்துபதவியில் இருக்கிறார்கள் என்ற அதிருப்தியை மாற்ற புதியவர்களுக்கே வாய்ப்புதர கட்சி முடிவெடுத்திருக்கிறது. இந்தமுடிவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

விவசாயக் கடன் தள்ளுபடி என்ற காங்கிரஸின் திட்டத்துக்கு மாற்றாக, பிரதான்மந்திரி ‘கிஸான் யோஜனா’ அறிவித்திருக்கிறீர்கள். விவசாயிகளிடம் ஆதரவு பெற இது போதுமா?

கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை காங்கிரஸ் அளித்தது. ஆனால், கடன்தள்ளுபடி செய்யப்பட்டதாகச் சான்றிதழ்களை மட்டுமே விநியோகித்தனர். வங்கிகளுக்குத் தரப்படவேண்டிய தொகையை இதுவரை தரவில்லை. எங்களுடைய பிரதான் மந்திரி கிஸான் யோஜனாவுக்கு மாநிலம்முழுவதும் விவசாயிகளிடம் வரவேற்பு நிச்சயம் இருக்கும். இந்தத்திட்டத்துக்கான தரவுகளை மத்திய அரசு திரட்டவிடாமல் மாநில அரசு தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனால், விவசாயிகளின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ளப் போகிறார்கள். பிரதான் மந்திரி கிஸான் யோஜனா மட்டுமில்லை, விவசாயிகளுக்கு வட்டியே இல்லாத கடன் திட்டமும் அறிவித்திருக்கிறோம். இதற்கும் நல்லவரவேற்பு கிடைத்துவருகிறது.

காங்கிரஸின் கோட்டையான தந்தேவாடாவில் உங்களுடைய கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் பீம் மண்டாவி, நக்ஸல்களால் கொல்லப் பட்டுவிட்டார். இதன் அரசியல் எதிரொலி என்னவாக இருக்கும்?

அவருடைய மரணம் எங்களுக்கு மட்டுமான இழப்புஅல்ல; மாநிலம் முழுவதுக்குமான இழப்பு. பஸ்தார் பகுதியை நக்ஸல்கள் மீட்டுவிட்டதால் இப்போது சாலையில்செல்வது பாதுகாப்பானதாக இல்லை; கடந்த 15 ஆண்டுகளில் செய்தசெயல்கள் அனைத்தையும் இந்த அரசு தலைகீழாக மாற்றிவருகிறது.

பதினைந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள், உங்களால் ஏன் நக்ஸல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியவில்லை?

எங்கள் முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றிபெற்றுவிட்டோம். சர்குஜா மண்டலத்திலிருந்து அவர்களை விரட்டிவிட்டோம். பஸ்தாரிலும் ஒருமூலைக்கு அவர்கள் விரட்டப்பட்டனர். இப்போது நக்ஸல்கள் மாநிலத்தின் எல்லாப்பகுதிகளிலும் சுதந்திரமாக நடமாடுகின்றனர். தங்களுடைய அரசே ஆட்சிக்கு வந்து விட்டதைப் போல துணிச்சலுடன் இருக்கின்றனர்.

2014-ல் வளர்ச்சியைத் தருவோம் என்று சொல்லித்தான் மோடியும் பாஜகவும் பிரச்சாரம்செய்தன; இப்போது ஏன் தேசியப் பாதுகாப்பு பற்றி மட்டும் பேசுகிறீர்கள்?

இந்த விவாதத்தை இப்படித் தொடங்கியதே காங்கிரஸ்தான். தேச விரோதச் சட்டப்பிரிவைத் திருத்துவோம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு திருத்தம் கொண்டுவருவோம் என்று காங்கிரஸ் அறிவித்தபிறகு, அது தொடர்பாக பேசாமல் எப்படி மவுனம்சாதிக்க முடியும். என்னுடைய அரசுக்குத் தேசபாதுகாப்புதான் முதல் முன்னுரிமை என்று மோடி அறிவித்தார். இதை நீர்த்துப்போகச் செய்யவேமுடியாது.

உங்கள் மருமகன் புனீத் குப்தாவுக்கு எதிராக மோசடி வழக்கை சத்தீஸ்கர் போலீஸார் பதிவு செய்துள்ளனர். உங்கள் ஆட்சியில் நடந்த சிலஊழல்கள் குறித்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் உங்களுக்குக் கவலை அளிக்கின்றனவா?

என்னையும் என் குடும்பத்தாரையும் வழக்கில் சிக்கவைக்க அரசியல் உள்நோக்கம்தான் காரணம்; நீதிமன்ற விசாரணையில் இந்த வழக்குகள் அடிபட்டுப் போய்விடும்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

2014 தேர்தலில் மொத்தமுள்ள 11-ல் 10 தொகுதிகளைக் கைப்பற்றினோம். இம்முறையும் அதற்குநெருக்கமாக வருவோம். சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்காது. நாங்கள் மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சியில் இருந்ததால் ஏற்பட்ட அதிருப்தியும் சேர்ந்துதான் சட்டமன்றத் தேர்தலில் அடைந்த தோல்விக்குக் காரணமாக இருந்தது. சட்டமன்றத் தேர்தலின் போது, ‘மாற்றம் வேண்டும்’ என்று மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித் தார்கள். இப்போது ‘மோடி (மீண்டும்) வேண்டும்’ என்று பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்.

நன்றி தமிழ் ஹிந்து பத்திரிக்கை

Leave a Reply