அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம், டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. 

இக்கூட்டத்தின் நிறைவு நாளில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது குருஷேத்திர போரில், ஆட்சி அதிகாரத்திற்காக கவுரவர்கள் செயல்பட்டதைபோல், பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் செயல்படுவதாகவும், உண்மையை நிலைநாட்ட பாண்டவர்களைப் போல, காங்கிரஸ் செயல் படுவதாகவும் தெரிவித்தார். 

பாஜகவை விட காங்கிரஸ் மீதே, மக்கள் அதிக எதிர் பார்ப்புகளைக் கொண்டிருப்பதாக ராகுல் காந்தி கூறினார். கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது கடைசி சில வருடங்களில், மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப காங்கிரஸ் அரசு செயல் படாததால், நாடாளுமன்ற தேர்தலில் தோற்க நேரிட்டதாக ராகுல் தெரிவித்தார். மேலும், மோடி என்கிற பெயர் உடையவர்கள், தொடர்ந்து முறைகேடு புகார்களில் சிக்கிவருவதாக, பிரதமர் மோடியை ராகுல் விமர்சித்தார். மேலும், ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் 15 லட்ச ரூபாய் செலுத்தப்படும், என தேர்தல் அறிக்கையில் மோடி தெரிவித்த வாக்குறுதி என்ன ஆனது, எனவும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார். 

நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். உணவு, உடை என அனைத்து விதத்திலும், பொதுமக்கள்மீது தமது விருப்பங்களை மோடி அரசு திணிப்பதாகக் கூறிய ராகுல் காந்தி, அழகான தமிழ் மொழியை ஒழித்துவிட்டு, பிறமொழியை தமிழர்கள்மீது திணிக்க, மோடி அரசு முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார். 

நிர்மலா சீதாராமன் பதிலடி:

இதனிடையே, பா.ஜ.க மீதும், பிரதமர் மோடி மீதும் ராகுல் காந்தி தெரிவித்த கடும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது ராகுல்காந்தியின் பேச்சுக்கள் தோல்வி அடைந்தவர்களின் அர்த்தமற்ற புலம்பல், என நிர்மலா சீதாராமன் கூறினார். ராமரின் அவதாரம்குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ், தம்மை பாண்டவர்கள் என அடையாளப் படுத்திக் கொள்வது வேடிக்கையாக உள்ளது, என அவர் குறிப்பிட்டார். 

நாட்டில் அவசரநிலையை பிறப்பித்து, மக்களை ஒடுக்கிய காங்கிரசுக்கு, தம்மை பாண்டவர்கள் என அழைத்துக்கொள்ள தகுதியில்லை,

நீரவ் மோடி, லலித்மோடியுடன் பெயர் ஒற்றுமை உள்ளதை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி விமர்சித்ததற்கு, கண்டனம் தெரிவித்த நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் ஆட்சி காலங்களில் தான், 12 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நிகழ்ந்திருப்பதாகத் தெரிவித்தார். 

பிரதமர் மோடி மீது இதுவரை எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டும் எழவில்லை என  நிர்மலா சீதாராமன் விளக்க மளித்தார். பாஜக தலைவர் அமித் ஷா மீதான கொலைவழக்கில் அவர் குற்றமற்றவர், என நிரூபணமாகி யிருப்பதாகக் கூறிய நிர்மலா சீதாராமன், நேஷனல் ஹெரால்டு முறைகேடுவழக்கில், ஜாமினில் வெளிவந்தவர் தான் ராகுல் காந்தி என்றும் காட்டமாக விமர்சித்தார். மேலும், தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறைதேவை என காங்கிரஸ் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டற்கும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன், தேர்தல் உட்பட அனைத்து துறைகளிலும் வெளிப்படைத்தன்மையை, பா.ஜ.க கொண்டு வந்துள்ளது என்றும், அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply