கார்கில் வெற்றி தினமான விஜய் திவஸ் நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில், போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

டெல்லியில் உள்ள போர் வீரர்களின் நினைவுச் சின்னமான அமர் ஜவான் ஜோதியில் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முப்படைத் தளபதிகளும் பங்கேற்று ராணுவ வீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் பேசிய மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர், சென்னை அருகே காணாமல் போன ஏஎன் 32 விமானத்தை கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் எல்லையில் ஊடுருவல் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
 
ஜம்மு காஷ்மீரின் டிராஸ் பகுதியில் உள்ள ராணுவ வீர்களின் நினைவுச்சின்னத்தில், ராணுவ உயர் அதிகாரிகளும், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி மூச்சு உள்ளவரை நாட்டிற்காக தீரமுடன் போரிட்ட ராணுவவீரர்கள் ஒவ்வொருவருக்கும் கார்கில் தினமான இன்று தான் தலை வணங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக டிவிட்டர் சமூக தளத்தில் தனது கருத்தினை பதிவிட்டுள்ள அவர், ராணுவ வீர்களின் தியாகம் உத்வேகம் ஊட்டுவதாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

ஊடுருவல் காரர்களை வெற்றிகொண்ட நமது ராணுவ வீர்களின் அச்சமற்ற தன்மையும், துணிவும் எப்போதும் நினைவில் கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், போரின்போது நாட்டின் அரசியல்தலைமை நிரூபித்துக் காட்டிய உறுதியும், அதன் காரணமாக கிடைத்த வெற்றியும் பெருமையுடன் நினைவுகூரத் தக்கவை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று கொண்டாடப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியை பாகிஸ்தான் ராணுவம் கடந்த 1999ம் ஆண்டு ஆக்கிரமித்தது. இதனையடுத்து, கார்கிலில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டி அடிக்கும் பணியில் ஆபரேஷன் விஜய் என்றபெயரில் இந்திய ராணுவம் ஈடுபட்டது. இரு தரப்புக்கும் இடையே 60 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த போரில், இந்தியா வெற்றிபெற்றது. கார்கிலில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் முற்றிலுமாக விரட்டி அடிக்கப்பட்ட நிலையில், 1999ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி போர் முடிவுக்கு வந்தது. 

இந்திய ராணுவம் வெற்றிபெற்றதன் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் தென்னிந்திய ராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஜக்வீர் சிங் தலைமையில் முப்படை வீரர்கள், கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply