மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடிசெய்துள்ளது. ஆனால், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யவில்லை என காங்கிரஸ் கட்சியின் தீபேந்தர் சிங் ஹூடா பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டினார்.

 

இதற்கு நிதிமந்திரி அருண் ஜெட்லி எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் அவர் கூறியதாவது:- 

 

கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கியகடனில் ஒரு ரூபாய் கூட மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை. இது பற்றி எதிர்க்கட்சிகள் அரசு மீது குற்றம்சாட்டுவதற்கு முன்னர், உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும். கடனை தள்ளுபடி செய்வது என்பது வங்கிகளின் வணிக நோக்கிலான முடிவு. கடந்த 2014-ம் ஆண்டு முதல் தற்போதுவரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. 

 

கடந்த மார்ச் 31 நிலவரப்படி, விவசாயம் மற்றும் அதனைசார்ந்த வாராக் கடன்களின் மொத்த மதிப்பு, ரூ. 62,307 கோடியாக இருந்தது. இது 2016 மார்ச் மாதத்தில் ரூ. 52,964 கோடியாக இருந்தது. வேளாண்மை மற்றும் கிராமப்புறங்களில் மத்திய அரசு இந்த நிதியாண்டில் ரூ.2.92 லட்சம் கோடி முதலீடுசெய்ய உள்ளது. இவ்வாறு ஜெட்லி கூறியுள்ளார்.

 

விவசாயகடன் தள்ளுபடி குறித்த திட்டம் ஏதும் இல்லை என மத்திய நிதித்துறை இணை மந்திரி சந்தோஷ் குமார் கங்வார் கூறினார்.

Leave a Reply